Breaking
Sun. Jun 15th, 2025

மஹிந்த அரசில் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு கடும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இனவாத அமைப்பான பொதுபலசேனாவின் பல மோசடிகள் தற்போது அம்பலத்துக்குவர ஆரம்பித்துள்ளன.

பொதுபலசேனா அமைப்பால் கடந்த வருடம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த அசின் விராது தேரர் கலந்துகொண்ட மாநாட்டுக்கு ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டதாகவும் இந்தப்பணம் வெளிநாடுகளில் பணிபுரியும் அப்பாவி இளைஞர்களிடமிருந்து பலவந்தமாகப் பெறப்பட்டது என்றும் பொதுபலசேனா அமைப்பின் முன்னாள் உறுப்பினர் அச்சல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வழங்கிய விசேட செவ்வியின் போது கூறியவை வருமாறு:

பௌத்த மதத்தை பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு பொதுபலசேனா உருவானது. ஆனால், அது அந்த நோக்கத்துடன் செயற்படவில்லை. இனவாதத்தைத் தூண்டும் குறிக்கோளுடன் செயற்பட முனைந்தது. இதனால் தான் நான் அந்த அமைப்பில் இருந்து விலகினேன்.

இந்த நாட்டில் மேலும் இனவாதத்தை வளர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுள் ஒன்று தான் மியன்மாரின் தேரர் அசின் விராதுவைக் கொண்டுவந்து கடந்த வருடம் கொழும்பில் நடாத்தப்பட்ட மாநாடு.
இந்நிகழ்வுக்காக சுகததாச உள்ளக அரங்கை ஒதுக்குவதற்கு 11 இலட்சம் ரூபாவும், அந்நிகழ்வுக்கான வாட கையாக 25 இலட்சம் ரூபாவும் சுகததாஸ உள்ளக அரங்குக்கு செலுத்தப்பட்டது.

இதற்குப் பல சிங்கள தனவந்தர்கள் நிதியுதவி செய்தனர். குறிப்பாக சரத் ரந்தணி என்ற வியாபாரி 40 இலட்சம் ரூபா கொடுத்தார். கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பணிபுரியும் அப்பாவி சிங்கள இளைஞர்களிடம் இருந்தும் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது.

முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதியில் இந்தக் கூட்டம் நடாத்தப்பட்டமை இனவாதத்தைத் தூண்டுவதாகவே அமைந்தது.

ஞானசார தேரர், டிலந்த அகியோரை பயன்படுத்தி பொதுபலசேனா அமைப்பு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபே ராஜபவின் பின்ணணியிலேயே உருவாக்கப்பட்டது.

அவரது வழிகாட்டலிலேயே இந்த அமைப்பு இயங்கியது. இந்த அமைப்பின் மேலும் பல மோசடிகளை விரைவில் அம்பலப்படுத்துவேன் என அவர் இதன் போது தெரிவித்தார்.

இந்த மாநாட்டுக்கு மியன்மாரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்த அசின் விராது தேரர் டைம் சஞ்சிகையால் தீவரவாதியின் முகம் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

tks – serandib paper

Related Post