-அஸ்ரப் ஏ. சமத்-
நாட்டில் உள்ள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் அணியும் ஹிஜாப் அல்லது பர்தா ஆடையை யாராலும் தடுக்க முடியாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்தார்.
குறித்த ஆடையினை தடுப்பதற்கு எந்தவொரு அரசாங்க பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு எந்தவித உரிமை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆடை முஸ்லிம் பெண்களது இஸ்லாமிய, கலை கலாசார ஆடையாகும். அதனை அவர்கள் அணிவதற்கு உரிமை உண்டு. எனினும் அதனை அணிய வேண்டாம் என சொலலி தடை விதிக்க யாராலும் முடியாது எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.
மருதாணை அல் – ஹிதாய வித்தியாலயத்தின் பழைய மாணவரான எம்.சி.பகார்டீனின் 50 இலட்சம் ருபா சொந்த நிதியில் பாடசாலைக்கான கூட்ட மண்டபம் மீள நிர்மாணிக்கப்பட்டு குளிருட்டப்பட்ட ஒரு மண்டபமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்தினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் திருமதி ரீ.பி.எம். சாகீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபு ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கல்வி அமைச்சர்,
“கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்பு பாடசாலையொன்றில் முஸ்லிம் மாணவிகள் இருவர் பாடசாலை சீருடையை அணிந்து வந்து காற்சட்டையை முன் கடவையில் வைத்து கழற்றி தனது புத்தக் பையினுள் வைத்துக்கொண்டு பாடசாலைக்குள் செல்வதை நான் சமூக வலையததளங்களில் கண்டேன்.
அப்போது இது தொடர்பில் எனது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் நானும் இணைந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். நான் கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலாவது விஜயம் மேற்கொள்ளும் மாகாணப் பாடசாலை இதுவாகும். இக்கல்லூரியின் குறைபாடுகளை மேல் மாகண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுடன் கலந்தாலோசித்து உதவுவேன்.
பாடசாலைகளில் கல்வி ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கு ஆகாரம் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளோம். கடந்த காலங்களில் கல்வி அமைச்சில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் எவ்வித கேள்விப் பத்திரங்களுமின்றி ஐந்து ஒப்பந்தக்காரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சீனாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட துணிகளை பாடசாலைகளுக்கு வழங்கி பில்லியன் கணக்கில் நிதி மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த கேள்விப் பத்திரங்களை வழங்கும் செயற்பாடு முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் நடைபெற்று வந்துள்ளது.
தற்பொழுது அந்த சீருடை வழங்கும் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும்போது அதிபர்கள் ஒரு வருடத்திற்குள் கோடிக்கணக்கில் நிதி சேகரிக்கப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.