மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் கலந்து கொள்கின்றன.இதற்காக பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் லங்காவி தீவுக்கு வந்துள்ளன. இந்தோனேஷியாவை சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நேற்று மாலை நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன.
அப்போது ஒரு விமானத்தின் இறக்கையில் மற்றொரு விமானம் மோதியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்து சிதறின. இந்த 2 விமானங்களின் விமானிகள் அனைவரும் பாராசூட் மூலம் உயிர் தப்பினார்கள். அந்த 2 விமானங்களில் இருந்து வெடித்து சிதறிய பாகங்கள் அருகில் இருந்த வீடுகளின் மீதும் கார்களின் மீதும் எரிந்தபடி விழுந்ததால், அவை தீப்பற்றி எரியத் தொடங்கின.
இதுகுறித்து தகவல் அறிந்த லங்காவி போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.பாராசூட் மூலம் தரையில் குதித்து படுகாயம் அடைந்த 4 விமானிகளும் பின்னர் லங்காவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிஸ்சாமுதீன் ஹுசைன் நேற்றிரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.