முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு 21 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 213 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வசதிகளை வைத்துக்கொண்டு அவர் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் மஹிந்த ராஜபக் ஷவுக்கான வாகனங்களையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் குறைக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தனக்கு வாகனங்களும் பாதுகாப்பும் போதுமானதாக இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு மூன்று வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் எரிபொருளும் வழங்கவேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்று உள்ளது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு 21 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 213 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளனர். டிபென்டர் ரக வாகனம் ஒரு பஸ் மற்றும் டபல் கெப் உள்ளிட்ட 21 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. எரிபொருளும் வழங்கப்படுகின்றது. எனினும் அவர் அது போதாது என்றும் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போதைய நிலைமையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கியுள்ள வாகனங்களையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் குறைக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் என்றார்.