Breaking
Sun. Oct 13th, 2024

-எம்.ஐ.முபாறக் –

இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுல் அதிகமானவர்கள் யுத்தம் என்ற போர்வையில் ஒளிந்துகொன்டு தமிழருக்கு கொடுமை இழைத்தவர்களாகவே காணப்படுகின்றனர். யுத்தத்தை ஒழிக்கின்றோம் என்ற பெயரில்-புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்கள் கடத்தப்பட்டமையும்-காணாமல் ஆக்கப்பட்டமையும்- கொல்லப்பட்டமையும்-இடம்பெயர்க்கச் செய்யப்பட்டமையும் நீண்ட வரலாறாக இருக்கின்றன.

இந்தக் கொடுமைகள் அத்தனைக்கும் நீதி தேடி இன்று தமிழர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டு நீதியை அடையும் கட்டத்தை எட்டியுள்ளன. பிரச்சினைகள் சர்வதேசமயமாக்கப்பட்டமையும் இராஜதந்திர நகர்வுமே இந்த சாதகத் தன்மைக்கு காரணம்.

இந்த நகர்வுக்கு மாறாக பிழையான முறைமையைத் தெரிவு செய்தால் எல்லாமே குழம்பிப் போய்விடும். மலேஷியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற சம்பவமானது சரியான நகர்வுக்குள் பிழையான முறைமையைப் புகுத்திவிடுமோ என்ற அச்சத்தைக் கிளப்பியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவை பலி வாங்குவதாக நினைத்துக்கொண்டு இலங்கைக்கான மலேஷிய தூதுவர் மீது மலேஷிய தமிழர்கள் நடத்திய தாக்குதலானது இலங்கைத் தமிழருக்கான தீர்வை நோக்கிய இராஜதந்திர நகர்வில் ஒரு கீறலை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

புலிகளுடனான யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள் அத்தனை பேரும் ஏதோவொரு வழியில் தமிழருக்கு கொடுமை இழைத்தவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்களின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின்போது அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருந்ததில்லை.

இந்த வரிசையில் மஹிந்த தலைமையிலான இறுதி யுத்தமே மிகக் கொடூரமான யுத்தமாக-40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றொழித்த யுத்தமாகப் பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழர்கள் ஏனைய ஆட்சியாளர்களை விடவும் மஹிந்தவையே தமிழினத்தின் அழிப்பாளர்களாகப் பார்க்கின்றனர்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைத் தேடி தமிழர்கள் இன்று ஓடுகிறார்கள் என்றால் அது மஹிந்தவின் ஆட்சியில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதியைப் பெறுவதற்குத்தான். உலகம் பூராகவும் உள்ள தமிழர்களின் மனங்களில் மஹிந்த மாத்திரமே தமிழின அழிப்பாளராகப் பதியப்பட்டுள்ளார்.

அவருடன் இணைந்து யுத்தம் செய்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் கூட தமிழர்கள் மறந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.அவருக்கு எதிராக எவரும் பேசுவதில்லை; மஹிந்தவிற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் இழைத்த கொடுமைகள் பற்றியும் பேசுவதில்லை.

இவ்வாறு உலகம் பூராகவும் உள்ள அனைத்துத் தமிழர்களும் மஹிந்த ஒருவரையே தமிழின அழிப்பாளராக-தமிழர்களின் மிகப் பெறிய எதிரியாகப் பார்க்கின்றனர். இதனால் மஹிந்த சர்வதேச நாடுகளுக்குச் செல்கின்றபோதெல்லாம் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி அவர் குற்றவாளி என்றும் அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் தமிழர்கள் உலக அரங்கில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில்தான் மஹிந்தவின் மலேஷிய பயணத்தின்போது அவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சம்பவமும் அமைந்துள்ளது.இதற்கு முன்பு தமிழர்கள் சர்வதேச நாடுகளில் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை விடவும் இந்தச் சம்பவம் மிக மோசமான சம்பவமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கான மலேஷியத் தூதுவர் தாக்கப்பட்டமையே இதற்கு காரணம்.

மஹிந்தவுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின்பேரிலேயே அவர் தாக்கப்பட்டார்.அவர் உதவி செய்தாலும் அவரைத் தண்டிக்க முடியாது.அவ்வாறு உதவுவது அவரது கடமை. அதற்காக அவரை மஹிந்தவின் ஆதரவாளர் என்றோ தமிழினத்தின் அழிப்பாளர் என்றோ சொல்லமுடியாது.இந்த சம்பவம் ஒரு முட்டாள்தனமானது மாத்திரமன்றி மஹிந்த மக்கள் ஆதரவைப் பெறுக்கிக்கொள்வதற்கான ஒரு துருப்புச் சீட்டாகவும் மஹிந்தவைத் தண்டிக்கும் தமிழர்களின் இராஜதந்திர நகர்வில் வீழ்ந்த ஒரு கீறலாகவுமே பார்க்கப்படுகின்றது.

மஹிந்தவின் ஊழல், மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டு அவருக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமையானது அவருக்கான மக்கள் செல்வாக்கை அதிகரிக்கச் செய்துவிடும். தனது செல்வாக்கை தூக்கி நிமிர்த்துவதற்கு ஏதாவது துருப்புச் சீட்டுக்கு கிடைக்காதா என்று ஏங்கி இருந்த மஹிந்தவுக்கு இந்தச் சம்பவம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மஹிந்தவைத் தண்டிக்கும் விதம் இதுவல்ல. இது தண்டனையல்ல சரிந்துபோன அவரது செல்வாக்கைத் தூக்கி நிமிர்த்தும் ஒரு கருவியாகும்.தண்டனைகள் எல்லாம் சரியான தண்டனையாக அமையாது. சில தண்டனைகள் தண்டிக்கப்படுபவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும்.அவ்வாறானதொரு சம்பவம்தான் இந்த மலேஷிய சம்பவம்.

அரசியலில் மஹிந்த மீண்டும் தலை தூக்காமல் இருப்பதும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் இருப்பதும்தான் அவருக்கு கொடுக்கப்படும் சரியான-நிலையான தண்டனையாகும்.அந்தத் தண்டனையை வழங்குவதற்குத் தேவை இராஜதந்திரம்.அந்த இராஜதந்திர நகர்வுடன் தமிழர் தரப்பு இப்போது போய்க் கொண்டிருக்கின்றது.

ஆனால்,இந்தியா மற்றும் மலேஷியா நாடுகளை சேர்ந்த தமிழர்கள் சில நேரங்களில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்ற பெயரில் தேவையற்ற பிரச்சனைகளை இழுத்துவிடுகின்றனர். மஹிந்தவுக்கு இரண்டு தட்டுத் தட்டினால் போதும் என்று நினைக்கின்றனர்; மஹிந்தவைத் தண்டித்துவிட்டோம்; பலி வாங்கிவிட்டோம் என்று நினைக்கின்றனர். இது முட்டாள்தனமான சிந்தனையாகும். இது இலங்கைத் தமிழருக்கு உதவி செய்வது அல்ல உபத்திரம் செய்வதாகும்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் புலிகள் என்றுதான் இன்று எல்லா ஊடகங்களும் பிரசாரம் செய்கின்றன. அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் இந்தத் தாக்குதலைக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். தூதுவர் மீதான தாக்குதலானது மஹிந்த மீதான தாக்குதலாகவே பிரச்சாரம் செய்யப்படுகின்றது. மஹிந்தவுக்கு எதிரான மைத்திரி-ரணில் அரசுக்குக்கூட மஹிந்தவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலைமை தமிழரின் போராட்டத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

வெளிநாட்டுத் தமிழர்கள் இலங்கையின் அரசியல் போக்கை கொஞ்சம் அவதானிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தீர்வாக எதை விரும்புகிறார்கள்; அவர்கள் விரும்புவதை அடைவதற்கு என்ன வழி என்று யோசிக்க வேண்டும். இதற்கு சரியான இராஜதந்திரமும் நீண்ட காலமும் தேவைப்படுகின்றன.

தமது எதிரிகளுக்கு இரண்டு தட்டுத் தட்டுவதால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடாது; வலியின் வடு ஆறிவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மலேஷிய தூதுவரைத் தாக்கியவர்கள் புலிகள் என்று சிங்கள ஊடகங்கள் பிரச்சாரம் செய்வதால் மீண்டும் புலி வந்துவிட்டது; மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டது என்றொரு மாயை இப்போது தெற்கில் தோற்றுவிக்கப்படுகின்றது.

மஹிந்தவை முற்றாக வெறுக்கின்ற-இனி அவர் ஆட்சிக்கே வரக்கூடாது என்று விரும்புகின்ற சிங்களவர்கள்கூட புலிகளால் மஹிந்தவுக்கு ஆபத்து இருக்கின்றது என்று தெரிந்தால் அவர்கள் மஹிந்தவின் ஆதரவாளர்களாக மாறிவிடுவர். மஹிந்த எப்படிப்பட்ட மோசமான அரசியல்வாதியாக இருந்தாலும் அவர் புலிகளால் தண்டிக்கப்படுவதை சிங்களவர்கள் விரும்பமாட்டார்கள் என்ற யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.

By

Related Post