வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ திடீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசனை இதற்காக அவர் தூது அனுப்பியுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கும் கொழும்பு அரசுக்கும் இடையிலான முரண்நிலையைத் தீர்ப்பதற்காக வடக்கு முதல்வருடன் யாழிற்கு வந்து பேசவும் தயாராக இருக்கிறார் என்று பாதுகாப்பு செயலாளர் வடக்கு முதலமைச்சருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபைக்கும், கொழும்பு அரசுக்கும் இடையில் கருத்தியல் ரீதியில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் அரச தரப்பு என்ற ரீதியில், வடக்கு முதல்வருடன் பேசுவதற்கு தான் தயாராக இருக்கிறார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் என்னிடம் தெரிவித்தார்.
பேச்சுக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்து சந்திக்கவும் தான் தயாராக இருக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இல்லையேல் தனது அலுவலகத்திலோ தனது வீட்டிலோ கூட சந்திப்பை வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
இதனை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் நான் தெரியப்படுத்தியுள்ளேன். அவர் இது தொடர்பில் எந்தப் பதிலும் வழங்கவில்லை.
இந்தப் பேச்சு நடக்க வேண்டும் என்றோ, இதில் நான் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்றோ எந்த ஆர்வமும் எனக்கு இல்லை. முடிவெடுக்க வேண்டியது வடக்கு முதலமைச்சர்தான். நான் பாதுகாப்பு அமைச்சின் செயலர் சொல்லிய தகவலை, வடக்கு முதல்வருக்குத் தெரியப்படுத்தியுள்ளேன் என்றார்.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போது, ‘வெளிநாட்டுச் சூழல், அயல்நாட்டு சூழல், உள்நாட்டு சூழல் என்பவை சற்று கரிசனை தந்து கொண்டிருப்பதால் அரச முக்கியஸ்தர்களைப் பொறுத்த வரையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
வடமாகாண முதலமைச்சரைப் பக்கத்தில் வைத்துத் தனிமையில் பேச வேண்டும் என்று சகோதரர்கள் இருவரும் காரணமில்லாமல் வெவ்வேறாகக் கருத்து வெளியிட்டிருக்க மாட்டார்கள்’ என்று மறைமுகமாக, ஜனாதிபதியின் சகோதரர்களான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய அழைத்ததையும் இதேபோன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் மற்றொரு சகோதரருமான பஸில் ராஜபக்ஷவும் ஏற்கனவே அழைத்ததையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். (ou)