Breaking
Thu. Mar 20th, 2025

பள்ளிவாசல்கள் தகர்ப்புக்கு பௌத்தர்கள் காரணமல்ல எனவும் முஸ்லிம் அமைப்புக்களிடையிலான மோதலினாலேயே இவை உடைக்கப்படுகின்றன எனவும் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கும் கருத்தை முற்றாக மறுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்:-

இஸ்லாமிய மதத்தில் இருக்கும் வேறு பிரிவினர்களுக்கிடையலான போராட்டமே பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமைக்கு காரணம், குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் ஆகிய இரு பிரிவினர்களுக்கிடையலான மதப்போராட்டமே பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க பத்தரமுல்லை ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களை பொறுத்த மட்டில் அவர்கள் எந்தப் பிரிவினராக இருந்தாலும் பள்ளிவாசல்களை அவர்கள் அல்லாஹ்வை வணங்குகின்ற இல்லமாகவே கருதுகின்றனர்.எனவே அல்லாஹ்வை வணங்குகின்ற, ஏக இறைவனாக அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட எந்த இஸ்லாமியனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கவும், ஈடுபடவும் மாட்டான் என்பது உலகறிந்த உண்மையாகும்.

அனால் அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இனவாத கும்பல்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல், தாக்குதல்களை சர்வதேசத்தில் மூடிமுறைப்பதற்காகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த செயல் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமனாக உள்ளது.

மேலும் தெரிவிக்கையில் பள்ளிவாசல்களுக்கும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அண்மைக்காலமாக பொதுபலசேனா, ராவண பலய போன்ற இனவாத அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பொய்யான அறிக்கைகள் என்பவற்றுக்கு அமைச்சர் பாட்டாளியின் கூற்று வலுசேர்ப்பதாகவும் பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்கின்றது.

இந்த நாட்டில் உள்ள அரசியல் அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர் பொறுப்பற்ற விதத்தில் உண்மைக்கு புறம்பான, முற்றிலும் மாறான கருத்தை தெரிவிப்பதை இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம் சமூகம் சார்பாக நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

மேலும் இதற்கு பிறகு ஆதாரமற்ற முறையில் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதோடு அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.

இவ்வாறான செயற்பாடுகளில் எந்த தரப்பினர் ஈடுபட்டாலும் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Related Post