‘முஹம்மத் தம்பி அவர்களின் மறைவு சமூகத்தின் கல்வித்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்’ – தவிசாளர் அமீர் அலி!

கல்வியமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சகோதரர் முஹம்மத் தம்பி அவர்களின் மறைவு, எமது சமூகத்தின் கல்வித்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான M.S.S.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

முஹம்மத் தம்பி அவர்களின் மறைவையிட்டு அவர் மேலும் கூறியுள்ளதாவது.

“சமூக சிந்தனை கொண்டவரான மர்ஹும் முஹம்மத் தம்பி, எப்போதுமே அரசியலுக்கு அப்பால் நின்று, சமூகம் சார்ந்து நல்ல ஆலோசனைகளை வழங்கி என்னை வழிப்படுத்தியவர். முஸ்லிம் அரசியல் தலைமைகள், எவ்வாறெல்லாம் சமூகம் சார்ந்து செயற்பட வேண்டுமென அனைத்து தலைமைகளுக்கும் அறிவுரை வழங்கக்கூடியவராக இருந்தவர்.

பலமான அரசியல் பின்னனியைக் கொண்டவராக இருந்தபோதும், அரசியலுக்கு அப்பால் அனைத்து முஸ்லிம் தலைமைகளுடனும் ஆக்கபூர்வமான உறவைப் பேணிய ஒரு சிறந்த கல்விமான்.

அன்னாரது மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த கவலையடைந்தேன். அவரது ஈடு செய்ய முடியாத இழப்பால் ஆழ்ந்த வேதனையில் இருக்கும் அன்னாரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருடனும் எனது கவலையை பகிர்ந்துகொள்வதுடன், அன்னாரது மறுமை வாழ்க்கை சிறப்புற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்றார்.