அஸ்ரப் ஏ சமத்
இன்று பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாய கட்டிடத்திற்குள் புறக்கோட்டை சிறு வியாபாரிகளினால் ஆர்ப்பாட்டம்.
முன் கதவின் கண்னாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். செத்சிரிபாயக் கட்டிடத்திற்குள் ஊழியர்கள் உள்ளே வெளியில் செல்லமுடியாதவாறு 1 மணித்தியாலயமாக இருந்தனர்.
கொழும்பு புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில் சொந்தமாக கடைகளை வைத்து வியாபாரம் செய்தவர்களது கடைகளை கடந்த வருடம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச பலவந்தமாக வெளியேற்றி கடைகளை அகற்றினார். அதன் பின் மிதக்கும் கடைகளை நிர்மாணித்தார்.
ஆனால் அவ்விடத்தில் வருடக்கணக்கில் சொந்தமாக கடைகளை வைத்திருந்தோம். அதற்கான உறுதிப்பத்திரமும் எங்களிடம் உண்டு.
இதுவரை எங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எவ்வித கடைகளோ அல்லது எங்களது ஜீவனோபாயத்தைக் கொண்டு செலலக் கூடிய வழிவகைகளையோ அதிகாரிகள் செய்யவில்லை. இத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையின்; கொழும்பை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் எங்களது கடைகள் இரவோடு இரவாக புல்டோர்சர் மெசின்களால் அகற்றப்பட்டன. அன்று நீதி நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றோம். ஆனால் எங்களது குடும்பங்களுக்கு ஜீவனோபாயமின்றி மிகவும் கஸ்டப்படுகின்றோம். என ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறினார்கள்.
புதிய அமைச்சர் ரவுப் ஹக்கீமே’ பிரதமரே, ஜனாதிபதியே நகர அபிவிருத்தியின் புதிய தலைவரே – எங்களது பிரச்சினைகளைத் தீருங்கள். என புறக்கோட்டை நகர் பௌத்த குரு தலைமையில் தனியார் பஸ் நிலையத்தில் சிறு வியாபாரம் செய்த வியாபாரிகள் இன்று பத்தரமுல்லையில் செத்சிரிபாய முன் வாயலில் அமர்ந்தவாறு ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள்.
இதனால் செத்சிரிபாய முன் வாயல் கதவுகள் திறக்க முடியாமல் பொலிசாரினால் இழுத்து மூடப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் கதவின் கண்னாடியைத் தகர்த்தனர். உடனே நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடுவந்ததும் அவருடன் கலந்துரையாடி உங்கள் எல்லோரையும் அழைத்து கலந்து ஆலோசித்து தீர்வைப் பெற்றுத் தருவதாக நகர அபிவிருத்தியின் தலைவர் ரண்ஜித் உறுதியளித்தார். இவ்உறுதி மொழியுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.