Breaking
Fri. Jun 20th, 2025

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரிஸ்டன் லோரைன் என்ற விமானி, பிரபல விமான சேவை நிறுவனமான ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்தில் 19 ஆண்டுகள் விமானியாக பணியாற்றிய அனுபவசாலி. ஆனால், 2006-ல் அந்நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காரணம் 19 ஆண்டுக்கால பணியின் பலனாக அவருக்கு கிடைத்த வியாதி.

நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதான 7 ஆண்டுகளில் பிஏஈ 146 ரக ஜெட் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தின் இன்ஜினை ஒவ்வொரு முறை இயக்கும் போதும் கரும் எண்ணெய் புகை வெளியாகும். ஆனால் அது இவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று அவர் அப்போது நினைக்கவிலை.

அவருக்கு ஏற்பட்டது ‘ஏரோடாக்சிக் சிண்ட்ரோம்’ என்ற நோய். தொடக்கத்தில் இந்த நோயின் பாதிப்பால் கை விரல்கள் மற்றும் கால்களில் உணர்ச்சிகள் மரத்துப்போவது, அடிக்கடி வாந்தி வருவது போன்ற உணர்வால் பாதிக்கப்பட்ட லோரைனுக்கு உடலியல் மற்றும் நரம்பியல் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு ‘ஏரோடாக்சிக் அறக்கட்டளை’-யைத்தொடங்கி தனக்கு தெரிந்த விமானத்துறை ரகசியங்களை இணையதளத்தின் மூலம் வெளியிட்டார். இந்த பிரச்சனைகள் தொடர்பாக விமானத்துறை நிறுவனங்களுக்கு பல கோரிக்கைகள் வைத்தார். அதை அவர்கள் ஏற்காதபோது உண்டான கோபம்தான் அவரை வெல்கம் அபோர்ட் டாக்சிக் ஏர்லைன்ஸ்(2007) உட்பட பல திரைப்படங்களை எடுக்க வைத்தது. இதில் ஊழியர்கள் மீதான விமான நிறுவனங்களின் அக்கறையின்மை உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

லண்டனில் ஜென்னி குட்மேன் என்ற மருத்துவர் 180 விமானிகளிடம் செய்த ஆய்வில் அவர்களுடைய உடலில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதும் பலருக்கு முடக்குவாத நோய்க்கான அறிகுறிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் விமானிகள் அறையில் உள்ள வேதிப்பொருட்கள் உருவாக்கும் நச்சு வாயுக்கள்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஏரோடாக்சிக் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டால் நினைவாற்றல் இழப்பு, நாள்பட்ட சோர்வு, சுவாசப்பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் என்று பல நோய்கள் உண்டாகும். தற்போது நோயுடன் சேர்ந்து தன் சக விமானிகளின் உடல் நலத்திற்காகவும் போராடி வருகிறார் போராளி ட்ரிஸ்டன் லோரைன்.

Related Post