Breaking
Wed. Jun 18th, 2025
ஹெரோயின் விற்பனையில் 17கோடி ரூபாவுக்கு அதிகமான பணம் மற்றும் சொத்துகளை குவித்த வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை வித்தானகே சமந்த குமாரவுக்கு எதிராக வழக்கின் குற்றப்பத்திரத்தில் இருக்கின்ற குறைபாடு காரணமாக அவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரண அனுர மெத்தேகொட தெரிவித்தார்.

வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

பிரதிவாதியொருவர் ஒரு வருடத்துக்குள் ஒரே மாதிரியாக குற்றங்கள் எவ்வளவு செய்தாலும் மூன்று சம்பவங்களுக்கான குற்றச்சாட்டுகள் மட்டுமே ஒரு வழக்குக்குள் உள்ளடக்கப்படவேண்டும் என்று குற்றவியல் தண்டனை கோவைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சட்டத்தரணி மெத்தேகொட சுட்டிக்காட்டினார்.

ஆகையால்,வழக்கை தொடர்ந்து முன்கொண்டுசெல்ல முடியாது என்றும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதுதொடர்பில் எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சந்தேகநபரான வெலே சுதாவின் மனைவியான கயந்தி பிரியந்தி(சந்தேகநபர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்) நீதிமன்றுக்கு நேற்று திங்கட்கிழமை சமூகமளித்திருந்தார்.  அவரை படம் பிடிப்பதற்கு புகைப்பட ஊடகவியலாளர்கள் முயன்றபோது அவர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஓட்டமெடுத்தார்.

இந்நிலையில், சந்தேகநபரான வெலே சுதாவை, விசேட அதிரடிப்படையினர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திலிருந்து அழைத்துசென்றனர்.

Related Post