Breaking
Tue. Apr 16th, 2024

இஷாலினியின் மரணம் தொடர்பில் சுயாதீனமான, முழுமையான விசாரணைகளை நடத்தி உண்மையை வெளிப்படுத்துங்கள் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (05) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“இன்று பேசுபொருளாக இருக்கின்ற முக்கியமான ஒரு விடயத்தை இந்த சபையில் பேச விரும்புகின்றேன். 102 நாட்களாக நான் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். அவ்வாறான ஒரு நிலையிலேயே, எனது வீட்டிலே பணிபுரிந்த சகோதரி இஷாலினி தீப்பற்றி மரணித்த சம்பவம், என்னையும் எனது மனைவி உட்பட குடும்பத்தினரையும் அயராத வேதனைக்கு உட்படுத்தியுள்ளது.

எனது சகோதரி பைரூசா பர்வின், 34 வயதிலே மரணித்த போது, நாம் எவ்வாறு வேதனைப்பட்டமோ, அவ்வாறான வேதனை இஷாலினியின் மரணத்தில் ஏற்பட்டுள்ளது.

16 வயதைப் பூர்த்தி அடைந்த பின்னர்தான், தரகர் ஊடாக எனது வீட்டில் பணிபுரிய இஷாலினி அழைத்துவரப்பட்டார். அப்போது, அவரது தாயாரோ குடும்ப உறவினர்களோ அவருடன் வருகைதரவில்லை. அவர்கள் இங்கு வந்து வீட்டுச் சூழல் பற்றி பார்க்கவுமில்லை. ஒரு தனிநபர் வாழ்வதற்கான 7*6 அடி அளவிலான அறை ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டதுடன், இணைந்த குளியலறை ஒன்றும் வழங்கப்பட்டு, பிரத்தியேகமாக வாழ்வதற்கான ஒழுங்கான கட்டமைப்புடனான அறைச் சூழல் ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த தீச் சம்பவம் கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி 6.45 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது. மாமனார் சிஹாப்தீனும் அவரது மனைவியும் உறங்கிக் கொண்டிருந்த வேளை, சகோதரி இஷாலினியின் அழுகுரல் கேட்டு, அவர்கள் ஓடிவந்த போது, அவரது உடலில் தீப்பற்றிக்கொண்டிருந்திருக்கின்றது. உடனே அங்கிருந்த காபட்டை எடுத்து, மனைவியின் 71 வயதுடைய மாமனாரும், 67 வயதுடைய அவரது மனைவியும் இணைந்து நெருப்பை அணைப்பதற்கு முழு முயற்சிகளை செய்துள்ளனர்.

‘அருகே இருந்த நீர் தொட்டிக்குள் பாயுங்கள்’ எனக் கூறி, இஷாலினியை அதற்குள் இருக்கச் சொல்லி நெருப்பை அணைக்க பிரயத்தனம் செய்துள்ளனர். குடிப்பதற்கு குளிர்மையான நீர் கேட்ட போது அதனையும் கொடுத்துள்ளனர். இந்தத் தீயை அணைப்பதற்காக 10,15 நிமிடங்கள் சென்ற பின்னர். 1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைப்பு எடுத்தனர். காலை 7.03க்கு இந்த அழைப்பு எடுக்கப்பட்டதாக தொலைபேசிப் பதிவுகள் உள்ளன. 7.33 க்கு அம்பியூலன்ஸ் வண்டியில் கூட்டிச் சென்றுள்ளார்கள். வைத்தியசாலை அனுமதிப் பதிவில் இது உள்ளது. ஆனால், பொலிஸாரோ 8.35 க்கு அவரை கொண்டு சென்றதாக, நீதிமன்றத்தில் தெரிவித்ததாக நான் அறிகின்றேன். அதுமாத்திரமின்றி, ஊடகங்கள் வேறு பொய்யான கருத்துக்களைப் பரப்புகின்றன.

என்னுடைய குடும்பத்திலோ அல்லது இரத்த உறவுக்கோ இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் எவ்வாறு வேகமாக செயற்படுவோமோ, அதேபோல அதிலிருந்து ஓர் அணுவும் குறையாமல் செயற்பட்டு, அந்த யுவதியைக் காப்பாற்ற முழு முயற்சியையும் எனது மாமனாரும் மாமியும்  செய்திருக்கின்றனர். அதன் பின்னர், எனது மனைவிக்கு இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்ட பின்னர், அவர் ஆஸ்பத்திரிக்கு ஓடிச் சென்றுள்ளார். அவரைக் காப்பாற்ற முழு முயற்சி எடுத்துள்ளார். மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் நோன்பு நோற்று பிரார்த்தித்துள்ளனர். அத்துடன் சம்பவம் நடந்த போது, தரகருடன் தொடர்புகொண்டு ‘தாயாரை ஒரு வாகனம் ஒன்றில் கொழும்புக்கு வருவதற்கு ஒழுங்கு செய்யுங்கள். அதற்கான செலவைத் தருகின்றோம்’ என எனது மனைவி சொல்லி இருக்கின்றார். இஷாலினியை தினமும் வைத்தியசாலைக்குச் சென்று எனது மனைவி பார்த்திருக்கின்றார். அவரது உயிரை எவ்வாறாவது காப்பாற்றித் தாருங்கள் என மன்றாடி இருக்கின்றார்.

ஒரு கட்டத்திலே வைத்தியர்கள் 7-10 இலட்சம் வரை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைக்காக தேவைப்படும் எனக் கூறி, அதற்கான தோலை சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமென கூறிய போது, எனது மனைவி அதற்கான பணத்தை நான் தருகிறேன் என கூறியிருக்கின்றார்.

இந்தச் சம்பவம் நடக்கும் போது நான் வீட்டில் இருக்கவில்லை. நான் இப்போது சிறையில் இருக்கின்றேன். இந்தச் சகோதரி வரும்போதும் நான் வீட்டில் இருக்கவில்லை. நான் மன்னாருக்கு பஸ்ஸிலே ஆட்களை கொண்டு சென்றதாக ஒரு பொய்யான வழக்கின் ஊடாக, அப்போது சிறைப் பிடிக்கப்பட்டிருந்தேன். அப்போதுதான், இந்தச் சகோதரி எனது வீட்டுக்கு வேலைக்கு வந்திருக்கின்றார். தரகரிடம் வயது என்னவென்று கேட்ட போது, அவர் 17 என்று கூறியிருக்கிறார். தோற்றத்தில் இவர் 17,18 வயதைப் போன்று இருந்தார். ஆனால் இப்போது பிறப்புச் சான்றிதழில் 16 வயது என்று அறிய முடிகின்றது. இவர் நல்ல பண்பான பிள்ளையாக இருந்தார். நாம் உண்ணும் உணவையே இவருக்கு வழங்கி வந்தோம். எங்கள் பிள்ளை போல பராமரித்தோம்.

3 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி இறக்கும் வரையில், இஷாலினியின் தாயார் மிகவும் அன்பாகவே எங்களுடன் நடந்துகொண்டார். ஊடகங்களுக்கும் சரியான அறிக்கைகளையே கொடுத்தார். ஆனால், இஷாலினியின் மரணத்தின் பின்னர் அவரது கருத்துக்கள் மாற்றமாக இருந்தன. அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்கள் சிலரும் இணைந்து, அந்தத் தாயாரையும் குடும்பத்தினரையும் பிழையாக வழிநடத்தியுள்ளனர். நாங்கள் சாப்பாடு வழங்கவில்லை, நாய்க் கூண்டுக்குள் போட்டார்கள், எந்த வசதியும் இல்லையென அவர்கள் கூறத் தொடங்கினர். இவைகளை நினைத்து நான் மிகவும் வேதனை அடைகின்றேன். எனது மனைவி பண்பான ஒருவர். தனது பிள்ளையைப் போன்று, ஏனைய பிள்ளைகளையும் நேசிப்பவர்.

அந்தத் தாயாரினதும் அவரது குடும்பத்தினரதும் வேதனையில் நாங்களும் பங்குகொள்கின்றோம். ஆனால் அவர்களை சிலர் பிழையாக வழிநடத்துகின்றனர். குறிப்பாக சில ஊடகவியலாளர்கள் இந்தக் கைங்கரியத்தை செய்கின்றனர். சில பாராளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகளுக்கு இவர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி, போராட்டத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

எங்கள் வீட்டில் எந்தவிதமான அசிங்கமான வேலைகளும் இடம்பெறவில்லை என்பதை பொறுப்புடன் கூற விரும்புகின்றேன். ஆனால், சில ஊடக வியாபாரிகள் தினமும் தனது தலைப்புச் செய்திகளுக்காக இந்தக் குடும்பத்தை பிழையாக வழிநடாத்தி வருகின்றனர். இந்த உயரிய சபையிலே அமைச்சர் சரத் வீரசேகர இருக்கின்றார். அவரிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான முழுமையான பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்தி, உண்மையைக் கண்டறிய நடவடிக்கை எடுங்கள். அவரது மரணத்தில் எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது. அவரது மரணத்துக்கு என்ன காரணம் அல்லது எவ்வாறு நடந்தது? என்பதை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு, பொரளை பொலிஸ் பிரிவு, அரச பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இணைந்து மேற்கொள்கின்றனர்.

தற்போது பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற உதவிய எனது மனைவியும் மாமனாரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்து ஐந்து நாட்களின் பின்னர், மதவாச்சியில் இருந்து எனது வீட்டுக்கு வந்த மைத்துனர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தரகரும் அடைக்கப்பட்டிருக்கின்றார்.

அதுமாத்திரமின்றி, பிரேத பரிசோதனையில் மிகத் தெளிவாக சில விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். ஆனால், மிக மோசமான செய்திகள் பரப்பப்படுவதனால்தான் இந்த விடயத்தை இங்கு கூறுகின்றேன்.

அதுமாத்திரமின்றி, எமது கண்ணியத்துக்குரிய நபி பெருமானார் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில், இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, முகநூல்களில் எழுதப்படுகின்றன. இந்த சம்பவம் நடைபெற்றதிலிருந்து தொடர்ந்தும் எமது வீட்டுக்கு பொலிசாரும், தடயவியல் நிபுணர்களும் வந்து வந்து விசாரணை செய்கின்றனர். ஏற்கனவே, இந்த விவகாரத்தில் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் மூவரை  சிறைப்பிடித்துள்ளனர். நானும், எனது சகோதரரும் 102 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.. எனது குடும்பத்துக்கு இன்னும் அநியாயம் செய்ய வேண்டுமென விரும்புபவர்கள், எஞ்சியிருக்கும் எனது பிள்ளைகள் இருவரையும் கூண்டில் அடைக்க வேண்டுமென்றா விரும்புகின்றனர்?

இந்த நாட்டிலே சுமார் ஒன்றரை வருடங்களாக அரசியல்வாதிகளிலே ஆகக் கூடிய துன்பத்தை அனுபவித்தவனாக நானே இருக்கின்றேன். ஆகக் கூடுதலான வேதனைகளை அனுபவித்த குடும்பமாக எனது குடும்பம் மாறியுள்ளது. பெருமானாரின் வழிமுறைகளை நாங்கள் பின்பற்றுவதனாலேயே, இவ்வாறு உச்ச துன்பங்களை தாங்கும் சக்தியை இறைவன் தந்திருக்கின்றான்.  இந்த விடயத்தில் நாங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றோம். இனியும் வழங்குவோம். சுயாதீன விசாரணையின் மூலம் இந்த நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துங்கள்” என்று கூறினார்.

Related Post