Breaking
Wed. Apr 17th, 2024

நிந்தவூர் பிரதேச சபையின் 54 ஆவது சபை அமர்வு, நேற்று (29) நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில், தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சபையின் வழமையான நடவடிக்கைகளை தொடர்ந்து, நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பிலுள்ள சிறுவர் பூங்கா மற்றும் பொதுச் சந்தையின் கட்டண அதிகரிப்பு குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் அமுல்படுத்தும் வகையில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது.

தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர் நிந்தவூர் பிரதேச கடலரிப்பு தொடர்பில் சபைக்கு ஆலோசனை வழங்க கூடிய துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று அவசியமெனவும், அதற்கான சபையின் அனுமதியினையும் கோரியிருந்தார். குறித்த குழுவினை நியமிக்க சபை அனுமதி வழங்கியதுடன், துறைசார் நிபுணர்களைக்கொண்ட குழு சபையிலேயே நியமிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரியும், பொது இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலையங்களை நீக்கக் கோரியும் சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, தவிசாளர் என்ற ரீதியில் அன்மைக்காலமாக பல கலாச்சார சீர்கேடுகள் தொடர்பான முறைப்பாட்டு கடிதங்கள் தன்னை வந்தடைந்திருப்பதாகவும், அவை தொடர்பில் இச்சபைக்கு தெறியப்படுத்துவது பொருத்தமானதெனவும் கூறிய தவிசாளர், நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சமூகக் கலாச்சார சீர்கேடுகள் குறித்தும், போதை பாவனை, போதை விற்பனை குறித்தும், குறிப்பாக பாடசாலை மாணவிகள் Tiktok செயலியில் தங்களது கலாச்சாரத்தை மறந்து மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதுவிடையம் தொடர்பில் சமைய, கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள நிந்தவூர் பள்ளிவாயல் தலைமைகள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிந்தவூர் கிளையினர், இவ்விடயங்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் தகவல்களை அலட்சியபோக்கில் விடுவதாக, கிடைக்கப்பெற்ற கடிதங்களில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில், நிந்தவூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன், நிந்தவூர் பள்ளிவாயல் தலைமைகள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிந்தவூர் கிளை ஆகியன தீர்க்கமான முடிவினை விரைவில் எடுக்க வேண்டும் என்பதாக சபையில் ஏகமனதாக உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கமைவாக நிந்தவூர் பள்ளிவாயல் தலைமைகள், அகில இலங்கை உலமா சபையினர் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை ஆகியன இனைந்து, விரைவான தீர்வினை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

Related Post