Breaking
Thu. Apr 18th, 2024
“என்மீது சுமத்தப்பட்ட ‘மாநகர சபை உறுப்புரிமை’ எனும் அமானிதத்தை, என்னால் முடியுமான அளவு சரியாக செய்திருக்கின்றேன்” என்று கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பீ.எம்.ஷிபான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்முனை மாநகர சபையில் தனக்கு உறுப்புரிமையை ஏற்படுத்தித் தந்த மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் செயலாளர், தவிசாளர் ஆகியோருக்கும் தான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
கல்முனை மாநகர சபையின் இன்றைய (31) அமர்வுடன் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்த பீ.எம்.ஷிபான் மேலும் கூறியதாவது,
 
“கௌரவ மேயர் அவர்களே, பிரதி மேயர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே, நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
இன்று கல்முனை மாநகர சபையின் அமர்வினை எனது இறுதி சபையாக்கி கலந்துகொண்டுள்ளேன். எனது உறுப்புரிமையை இராஜினாமா செய்து, அடுத்ததாக பதவியில் அமர்த்தப்பட இருக்கின்ற ஒருவருக்கு வழங்கவுள்ளேன். மருதமுனையில் கட்சி கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு நானும், எனது பூரண பங்களிப்பினை வழங்கி விடைபெறுகின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்!
 
என்னைப் பொறுத்த அளவில், 5ஆம் வட்டாரத்தில் ‘ரோட்டு போட்டால் ஓட்டு போடுவோம்’ என போர்க்கொடி தூக்கிய மக்களுக்கு, வெற்றி பெற்றால் தீர்வொன்று கிட்டுமென்று தேர்தலில் களம் கண்டு இருப்பினும், அந்த வட்டாரத்தில் தோல்வியை தழுவிக்கொண்டமையினால, அந்த மக்களுக்கு ரோட்டு போட்டுக் கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி இன்றுவரை எனக்கு இருந்துகொண்டே இருக்கின்றது.
 
மாநகர சபையை ஆளுகின்ற முஸ்லிம் காங்கிரஸினால் அந்த வீதி போடப்பட்டு இருப்பினும், அந்த வீதிக்கு ஒளி ஊட்டுகின்ற பணியினை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு முழுவதுமாக, சுமார் 90 வீதமான பகுதிக்கு ஒளியூட்டி கொடுத்து இருக்கின்றேன் என்ற திருப்தியோடு விடைபெறுகின்றேன். இதற்காக எனக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்த கல்முனை மாநகர மேயருக்கு நான் என்றென்றும் நன்றியோடு இருக்க கடமைப்பட்டுள்ளேன்.
 
எனது உறுப்புரிமை பதவிக் காலத்தில் சுமார் 60 கோப்ரா ரக மின் குமிழ்களை பொருத்தி உள்ளேன். கணிசமான கோப்ரா ரக மின் குமிழ்களை மேயர் எனக்குத் தந்து உதவியுள்ளார். நான் எனது கொடுப்பனவை கொண்டு அறிமுகபடுத்திய மாதம் ஒரு வேலை திட்டத்தின் கீழ், மின் குமிழ்களை பெற்று கொடுத்துள்ளேன். கல்முனை மாநகர சபை கௌரவ உறுப்பினருமான மனாப் அவர்களும் எனக்கு இரண்டு கோப்ரா ராக மின்குமிழ்கள் தந்து உதவி இருந்தார்.
 
மேலும், உறுப்புரிமையை எனக்கு மாநகர சபையில் ஆறாவது முறையாகவேனும் ஏற்படுத்தித் தந்த மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய கௌரவ தலைவருக்கு, செயலாளருக்கு, தவிசாளருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
என்னைப் பொறுத்தவரையில், நான் எங்கள் கட்சிக்காக மாடாய் உழைத்துள்ளேன். என்மீது சுமத்தப்பட்ட மாநகர சபை உறுப்புரிமை எனும் அமானிதத்தை, என்னால் முடியுமான அளவு சரியாக செய்திருக்கின்றேன். எனது காலத்தில் எங்கள் வட்டாரத்தில் மின்குமிழ் பொருத்துவதாயினும், திருத்துவதாயினும் சரியான முறையில் நடைபெறுவதற்கு உந்துதலாக இருந்து உள்ளேன். மற்றும் திண்மக்கழிவகற்றல் சரியான முறையில் செயற்படுத்துவதனை வைத்தியருடன், மேயருடன் பேசி உத்தரவாதப்படுத்தியிருந்தேன்.
மாநகர சபையின் சுகாதார குழுவில் அங்கம் வகித்து, இந்த மாநகரத்திற்கு திண்மக்கழிவகற்றல் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஒத்துழைப்போடு கடமையாற்றி உள்ளேன். மற்றும் மாநகர மக்களின் நன்மைக்காக திண்மக்கழிவகற்றல் வரியை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியிலிருந்து அழுத்தம் கொடுத்தவனாக நானும் இருந்துள்ளேன்.
 
மாத்திரமல்லாமல், மாநகர சபையில் மேயரின் நல்ல விடயங்களை ஆதரித்தும், சில நேரங்களில் எதிர்த்தும் வந்திருக்கின்றேன். மாநகர மக்களுக்காக எந்த சமயத்திலும் உறுதியோடு, உண்மைக்கு உண்மையாக செயற்பட்டு வருகின்றேன் என்பதனையும், இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
 
ஆனால், துரதிஷ்டவசமாக நான் பதவி ஏற்றுக்கொண்ட காலமாயினும் சரி, கல்முனை மாநகர சபையின் கடந்த 3 வருட காலமாயினும் சரி, எமது கட்சிக்கும் தலைமைக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை கொண்ட காலமாகவே அமைந்திருந்தது. 2019 குண்டுவெடிப்பு மற்றும் கட்சித் தலைமை பழிவாங்கப்பட்டமை போன்ற இன்னோரன்ன காரணங்களால், கட்சியினால் எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளையும் கடந்த காலங்களில் செய்துகொள்ள முடியாத நிலை இருந்து வந்திருக்கின்றது.
 
மேலும், எனக்காக எந்த சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய மாநகர கௌரவ மேயர், பிரதி மேயர், கௌரவ உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். விசேடமாக, எனது வட்டார கௌரவ உறுப்பினர் நவாஸ் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மேலும், எனது வட்டாரத்திலிருந்து வருகை தந்திருக்கும் இந்த கௌரவ உறுப்பினர் ரஜாப்தீன் அவர்களுக்கும், சாய்ந்தமருது சகோதரிக்கும், வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், என் மீது நம்பிக்கை வைத்து, எனக்காக வாக்களித்த வட்டார மக்களுக்கு என்றென்றும் நன்றியும் விசுவாசமும் உடையவனாக இருப்பேன் எனக் கூறிக்கொள்கின்றேன்” என்றார்.

Related Post