Breaking
Fri. Apr 26th, 2024

முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை மூடி மறைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியூதின், பெரும்பான்மை இன ஊடகங்கள் சில முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்திற்கு தூபமிடுகிறது என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியூதீன் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பான்மை இன ஊடகங்களும் சில இனவாத சக்திகளும் இணைந்து இன்று புதியதொரு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர். புத்தளம் வட்டக்கச்சியிலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று அங்குள்ள அப்பாவி முஸ்லிம் மக்களிடம் பெரும்பான்மை ஊடகங்கள் குழப்பகரமான முரண்பாடுகளை உருவாக்குகின்றன.

உங்களுக்கு அமைச்சர் றிஷாத் வில்பத்து காட்டில் காணிகளை கொடுத்துள்ளார்தானே என்றெல்லாம் கேள்வி கேட்டு அப்பாவி முஸ்லிம்களை பலிக்காடாவாக்கி முஸ்லிம்கள் இலங்கைக்கு எதிரானவர்கள், இயற்கை வளங்களை அழிப்பவர்கள் என்ற கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்திற்கு தூபமிடுகின்றனர்.

முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் உட்பட மக்களின் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் பள்ளிவாயல்களின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்களிடம் தெளிவுபடுத்தல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அதை விடுத்து அகதி முகாம்களிலுள்ள அப்பாவி முஸ்லிம்களை பலிக்கடாவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முப்பது வருட கால யுத்தத்தால் நாடும் மக்களும் அனுபவித்த நெருக்கடிகளும் வேதனைகளும் போதும். இனியும் நாட்டில் இனவாதம் வேண்டாம். அன்று தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறான இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதால்தான் அம் மக்கள் பிரிவினைக்கு தள்ளப்பட்டனர். அந்த நிலைமையை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தி விட வேண்டாம்.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் மறிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி போன்ற பிரதேசங்கள் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களாகும். அது மூடி மறைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளோம் என்றும் அமைச்சர் றிஷாத் பதியூதின் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *