Breaking
Sat. Apr 20th, 2024

-ஊடகப்பிரிவு-

முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணித் தேசிய இணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசியலில் பெண்களின் பங்களிப்பினை நோக்கும் போது, ஏனைய சமூகத்தைச் சார்ந்த பெண்களுடன் ஒப்பிடுகையில், முஸ்லிம் பெண்கள் அரசியல் விடயங்களில் குறைந்த ஈடுபாட்டையே காட்டி வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அரசியலில் ஈடுபடுவதற்கான சமூக அங்கீகாரம் குறைவு மற்றும் அரசியல் பங்கேற்பு தொடர்பில் இஸ்லாமிய நிலைப்பாடு குறித்து முறையான புரிதல் இன்மையும், தவறான எண்ணங்களினாலும் அரசியல் மேடைகளில் பெண்களுக்கு சேறுபூசும் நிலையே காணப்படுகின்றது. மேலும், பெண்களுக்கு எதிராக பல உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை மேற்கொள்வது போன்ற பல விடயங்களைக் குறிப்பிடலாம்.

இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமேயானால், பெண்கள் இஸ்லாத்தையும், நபிகளாரையும் ஆதரித்து, போர்க்களத்தில் துணிந்து நின்று, உயிர்த் தியாகம் செய்த பல இஸ்லாமிய யுத்தகால வரலாறுகள் எமக்குச் சான்றாகும். அந்தவகையில், முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

பெண்களுக்கே உரித்தான சில பிரச்சினைகள் ஆண்களால் அணுகப்படும் விதம் உகப்பானதன்று. “பெண்ணை பெண்ணே அறிவாள்” என்பதற்கிணங்க, பெண்களின் பிரச்சினைகளை பெண்கள் அணுகுவதே சிறந்ததாகும். எம் சமூகம் சார்ந்த பெண்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வரைவதிலும், முன்னெடுப்பதிலும் ஆளுமை மிக்க பெண்களை பங்கெடுக்கச் செய்தல் சமூகத்தின் இன்றைய தேவையாகும் என்றும் கூறினார்.

இதேவேளை, நீர்கொழும்பு பிரதேசத்துக்கான மகளிர் அணித் தலைவியாக திருமதி. பாத்திமா சிஹாரா தெரிவுசெய்யப்பட்டார்.

நீர்கொழும்பு மாவட்ட மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும், வேட்பாளருமாகிய இஹ்சான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துசிறப்பித்தனர்.

 

 

 

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *