Breaking
Sat. Apr 20th, 2024
மூதூர் பிரதேச மக்களுக்காக தமது வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட முன்னாள் தவிசாளர் ரபீக் அவர்களின் மறைவு தமக்கு கவலையளிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
தவிசாளர் மர்ஹூம் ரபீக் அவர்களின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
“மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக பணியாற்றிய மர்ஹூம் ரபீக், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை பிரதேச அரசியலுக்காகவும் சமூகப் பணிகளுக்காகவும் செலவிட்டவர். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக விளங்கிய அவர், ஒரு சமூகப்பற்றாளர் மட்டுமின்றி, மூதூர் மக்களின் துன்ப துயரங்களின் போது நேரடியாக களத்தில் நின்று பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர். யுத்த காலத்தில் மிகவும் துணிச்சலுடன் மக்கள் பணியாற்றியவர்.
 
அண்மைக்காலமாக அவருக்கும் எனக்குமிடையே மிக நெருக்கமான தொடர்பு இருந்தது. அவரது அந்திம காலங்களில் அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக எம்முடன் இணைந்து பயணித்தார். நான் மூதூருக்கு செல்கின்ற போதெல்லாம் அவரை சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவர் சுகயீனமுற்றிருந்ததை கேள்வியுற்று, அண்மையில் அவருடன் தொலைபேசியில் உரையாடி உடல்நலன்களை பற்றி விசாரித்தேன்.
 
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் ரபீக் அவர்களைப் பொருந்திக்கொண்டு, அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற சுவனத்தை வழங்குவானாக.

Related Post