Breaking
Wed. Apr 24th, 2024

நோன்பு என்றால் மொழிரீதியில் “தடுத்துக்கொள்ளல்”,எனும் கருத்தை கொண்டது.மார்க்க ரீதியில் “சூரிய உதயம் முதல் அது மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் அல்லாஹ்வுக்காக ஒரு வணக்க ரீதியில் தடுத்துக்கொள்ளல்”.என்பதாகும்.இது இஸ்லாதின் அடிப்படை வணக்கங்களில் ஒன்று.இதை அல்லாஹ் அவனது அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான்.அல்லாஹ் குறிப்பிடும் போது.”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதியாக்கப்பட்டுள்ளது;

(அதன் மூலம்) நீங்கள் பயபக்தி உடையோராக  ஆகலாம்.)2:185(.இதை நபிகயளார் குறிப்பிடும் போது “இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது.அவையாவன அல்லாஹவைத்தவிர வேறு இறைவன் இல்லை என சான்று பகர்தல்,தொழுகையை நிலை          நாட்டல், ஸகாத்தை வழங்கல், ரமழானில் நோன்பு வைத்தல்,அல்லாஹ்வின் வீட்டை ஹஜ்ஜுக்காக தரிசித்தல்”. (புகாரி, எண் 8,முஸ்லிம், எண் 19).இக்கடமையானது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ரமழான்கள் நோன்பு நோற்றார்கள்.

நோன்பின் சிறப்பு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது”ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும்; நோன்பைத் தவிர! நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்” என ஆற்றலும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்.உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது வம்புக்கிழுத்தால் “நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்று அவர் கூறிவிடட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, மறுமை நாளில் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன.

நோன்பு துறக்கும்போது, நோன்பு துறப்பதை முன்னிட்டு அவர் மகிழ்ச்சியடைகிறார். தம் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவர் மகிழ்ச்சியடைகிறார்.(நூல், புகாரி ,எண்:2118).இன்னும் ரமழான் வந்துவிட்டால் அது தனிச்சிறப்புகளை கொண்டுவருகிறது.இதை நபிகளார் குறிப்பிடும் போது.“ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்”.(நூல்புகாரி, எண்1956).இன்னும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:”ரமளான் மாதமாகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன;ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்.

(நூல்,புகாரி எண்:1957).இன்னும் நோன்பானது பாவங்களை விட்டும் தடுக்கும் ஒரு கேடயாகும்.இதைப்பற்றி நபிகளார்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது“நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்!முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான்நோன்பாளி!’என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்)

‘எனக்காகநோன்பாளிதம்உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!” (என்று அல்லாஹ் கூறினான்)”(நூல் புகாரி).நோன்பின் கூலியானது மிகப்பெரியது அது சுவரக்கமாகும்.இதற்கென அல்லாஹ் ஒரு வாயிலை அமைத்து வைத்துள்ளான் இதன் மூலம் நோன்பாளிகள் மாத்திரம் நுழைவர்.இது பற்றி அண்ணலார் அவர்கள் குறிப்பிடும் போது: “சொர்க்கத்தில் “ரய்யான்” எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள்.

“நோன்பாளிகள் எங்கே?” என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் அதன் வழியாக நுழைவார்கள். அவர்களில் இறுதி நபர் நுழைந்ததும் அந்நுழைவாயில் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறெவரும் நுழையமாட்டார்கள்.(நூல் முஸ்லிம், எண்,2121). முன்னைய  பாவங்களுக்கு பரிகாரமாகும்.இதை நபிகளார் இவ்வாறு கூறினார்கள்.
“(உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முன்னைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன எ‌ன்று. (நூல் புகாரி, எண்:30,முஸ்லிம், எண்: 760).இவ்வாறு இதன் சிறப்புக்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.இதன் சிறப்புக்களை அறிவதானது இம்மாதத்தை நல்ல முறையில் பயன் படுத்த ஒரு உந்து சக்தியாக அமைய வேண்டும்.

நோன்பு கடமையாக்கப்பட்டதன் இலக்குகளும் நோக்குகளும்

1. அல்லாஹ்வுக்கு கட்டுப்படலும் அவனுக்கும் பயந்து நடத்தலும்.அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது அல்லாஹ் உங்களுக்கு முன்னிருந்தோருக்கு போன்று உங்களுக்கும் நோன்பை கடமையாக்கியுள்ளான்,நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக மாறுவதற்கு என்கின்றான்.ஆகவே இது மிகவும் அடிப்படை நேக்கமாகும்.
2. இன்னும் பொறுமைக்கான பயிற்ச்சியும் ஆசைகளை அடக்குவகதற்கான பயிற்ச்சியும்.
3. ஏழை எளியோரின் தன்மைகளை அறிவதற்கான சந்தரப்பத்தினை வசதிபடைத்தவர்களுக்கு அளித்தலும்,சமத்துவத்தினை பேணலும். பின்னிரண்டும் இவற்றின் அமசங்களை நோக்கி கூறப்படக் கூடியவைகளாகும்.

நோன்பின் நிபந்தனைகள்.
1. இஸ்லாம்;-.இது அனைத்து இஸ்லாமிய  கடமைகளுக்கும் அடிப்படையாகும்.நோன்பு இறைநிராகரிப்பாளருக்கு கடமையாகாது.
2. புத்தி:- .இன்னும் புத்தியற்றவருக்கும் இது கடமையாகாது.
3. பருவயதை அடைதல்:- .சிறுவர்ரகளுக்கு இது கடமையாக  மாட்டாது இருப்பினும் அவர்கள் பயிற்றுவிக்கப்படுவர்.
4. நோன்பு நோற்பதற்கான சக்தி:- .சக்தியற்றவருக்கு இது கடமையாகாது.
5. ஊரில் தங்குபவராக இருத்தல்:-.பிரயாணிக்கு கடமையாகமாட்டாது.நோன்பை விடுவதறகான அனுமதியுண்டு.
நோன்பு நிறைவேறுவதற்கான நிபந்தனைகள்.
இஸ்லாம்,பெண்கள் மாதவிடாய்,பிள்ளைப்பேற்றின் பின் வெளியாகும் இரத்தம் ஆகியவைகளிலிருந்து நீங்கியிருத்தல்,புத்தி,பிரித்தறிதல்,இரவில் நிய்யத்து வைத்தல் போன்றனவாகும்.


நோன்பின் போது விரும்பத்தக்க விடயங்கள்.
1. ஸஹர் செய்தல்:-.நபி ஸல் அவர்கள் கூறும் போது .ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக  ஸஹர் உணவானது பரக்கத் பொறுந்தியதுஆகும் என.(நூல் புகாரி1923, முஸ்லிம்1095).சூரிய உதயத்தை அஞ்சாத போது ஸஹரை பிற்படுத்துவது.
2. சூரிய மறைவை உறுதிப்படுத்திய  பின் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தல்:-இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:”நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்! (நூல், புகாரி, எண் 957, முஸ்லிம்).
3. வணக்கங்களை அதிகப்படுத்தல்:-,தொழுகை,குர்ஆனை ஓதல், தர்மம்,அல்லாஹ்வை ஞாபகப்படுத்தல்,முன் பின் ஸுன்னத்துக்கள்,இரவுத்தொழுகை,காலத்தை நல்லவிடயஙகளில் கழித்தல் போன்ற விடயங்களை செய்தல்.நிச்சயமாக  நல்லசெயல்கள் தீயவற்றினை அழித்துவிடும்.
4. நாவை கெட்ட  விடயங்களை விட்டும் தடுத்துக்கொள்ளல்:-.பொய்,அவதூறு,கெட்டவார்த்தை,புறம் ஆகியவைகளை விட்டும் தடுத்துக்கொள்ளல்.இதை நபிகளார் குறிப்பிடும் போது:”பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!”என,(நூல்,புகாரி எண்,1903). இன்னும் எவராவதுகெட்டவார்த்தை பேசினால் இதன் போது சத்தமாக  நான் நோன்பாளி என உறக்கச்சொல்ல வேண்டும்.
5. நோன்பு விடும் போது “ருதப்” எனப்படும் (அரைவாசிபழுத்த பேரீச்சம்)பழத்தை கொண்டு திறத்தல்,இது இல்லாத  போது சாதாரன  பேரீச்சம்,இதுவும் இல்லாத  போது தண்ணீர்ஆகியவைகளை கொண்டு நோன்பு திறத்தல்.
6. நோன்பு திறக்கும் போது பிரார்த்தனை புரிதல்:-.நிச்சயமாக நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் துஆ  ஏற்றுக்கொள்ளப்படும்.

நோன்பின் போது தடுக்கப்பட்டவைகள்

நோன்பாளிக்கும்,நோன்பாளியல்லாதவருக்கும்,புறம்,கோள்,பொய் கூறல்,நோவினை செய்தல்,கெட்டவார்த்தை,போன்றன தடுக்கப்பட்ட  அம்சங்களாகும். இது நோன்பாளிக்கு மிகவும் பாரிய  அம்சமாகும்.ஏனெனில் இதன் கால  நேரங்களின் சிறப்பம்சத்தை கருத்தின் படி.
வெறுக்கத்தக  செயற்பாடுகள்.
 எச்சிலை சேமித்தலும் விளுங்குதலும்.
 வாய்கொப்பளித்தல்,நாசிக்கு நீர் செலுத்தல் ஆகியவைகளில் தொண்டைக்குழிக்கு போகுமளவான அதிகரிப்பு.

நோன்பை முறிக்கும் விடயங்கள்
1. உண்ணல்,பருகல்:- இதை அல்லாஹ் குறிப்பிடும் போது, “நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.(2:187).
2. மணைவியுடன் இல்லற உறவில் ஈடுபடல்:-.இதற்கான ஆதாரம் முன்னைய வசனம் (2:187)
3. மாதவிடாய்,மற்றும் பிள்ளைப்பேறு இரத்தம்.
4. மதம்மாறல்
5. மூக்கு,வாயில் ஆகிய  வழிகளினூடாக வயிற்றை ஏதும் சென்றடைதல்.
6. நோன்பின் போது வேண்டுமென வாந்தியெடுத்தல்.
7. இரத்தம் குத்தியெடுத்தல் –அல்ஹிஜாமா-.
8. நிய்யத்தில் தடுமாற்றம்.
நோன்பை முறிக்காத  சில விடயங்கள்.
1. நேரம்,நோன்பின் சில  சட்டங்களை அறியாதிருத்தல்.
2. மறதியாக  உண்ணல்,பருகல்.
3. நோன்பை விடுவதை நோக்காக  கொள்ளாத  சில  விடயங்கள், உதாரணமாக நித்திரையில் ஸ்கலிதமாதல்,வாந்தியேற்படல் போன்றன.

நோன்பை விடுவதற்கான சலுகைகள் சில
1. நோயாளி.-நோய்-
2. பிரயாணி.-ஆகுமான பிரயாணம்-
3. மாதவிடாய் பெண்களும்,மகப்பேற்று ரத்தம் ஏற்பட்ட  பெண்களும்.
4. வயதுமுதிர்ந்த ஆண்,பெண்.-
5. கற்பினிபெண்களும்,தாயூட்டும் பெண்களும் இவர்கள் இவர்களின் அல்லது வாரிசின் ஆபத்தை பயந்தால்.தீங்கைஅஞ்சல்-
6. ஜிஹாதின் போது பலம் தேவை எனின் அதை விடல்.

ஆக்கம்:- அபூ உமர் அன்வாரி BA மதனி

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *