Breaking
Thu. Apr 25th, 2024

– S.சஜீத் –

இப்போதெல்லாம் அரைத் தூக்கத்தில் எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடுகிறோம். அப்பாவும், பல வீடுகளில் அம்மாவும் மற்றொரு பக்கம் வேலைக்கு ஓடுகிறார்கள். மாலையில் அனைவரும் களைத்துப்போய்விடுகிறோம். ஆனால் அம்மா மட்டும் வேலைக்குச் சென்று வந்தாலும்கூட வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது.

ஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்?

ஆனால், அப்பாவுக்கும், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கும் எட்டு மணி நேரம்தான் வேலை. பெரும்பாலான நிறுவனங்களில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை நேரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்பதான் ஊதியமும் தரப்படுகிறது. இந்த எட்டு மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?

இதற்குப் பின்னே ஒரு பெரிய கதை இருக்கிறது. மிக முக்கியமான வரலாறு அது. அதுதான் தொழிலாளர் தினமான மே தின வரலாறு!

1880 – ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கி, 1890 – ஆம் ஆண்டு பாரீசில் உருவானதுதான் மே தினம். அல்லது, உலகத் தொழிலாளர் தினம். அதாவது மே 1. இது பள்ளி விடுமுறைக் காலத்தில் வருவதால் பலரும் இந்த நாளைப் பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை. மற்ற விடுமுறை நாட்களைப்போல இதுவும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் முற்காலத்தில் 18 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம்!

இயற்கை தருவதைத் தவிர மற்ற அனைத்தும் மனிதர்களின் கூட்டு உழைப்பின் மூலம் உருவாவதுவே ஆகும். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் அடிப்படை மூலதனம் என்ன தெரியுமா? பல மனிதர்களின் கூட்டு உழைப்புதான். ஆனால், 18 – ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு நாடுகளில் ஒரு கொடுமையான வழக்கம் இருந்தது.

நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (இட்ஹழ்ற்ண்ள்ற்ள்) இதற்கு எதிராகப் போராடியது. நாளொன்றுக்கு பத்து மணி நேரம் வேலை செய்யும் உரிமை தொழிலாளர்களுக்கு வேண்டும் என்பதுதான் அந்த இயக்கத்தின் கோரிக்கை.

1832 – ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதுபோல, பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்த தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்டு டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) 1884 – ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டமைப்பு “எட்டு மணி நேர வேலை’ கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ச்சியாக இயக்கங்களையும் நடத்தியது. இது மிகப் பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழி வகுத்தது. கறுப்பு அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பின்னணியிலேயே இந்த இயக்கம் வலுப்பெற்றது. அதற்கு முன்பு கறுப்பு அடிமைகள், தாங்கள் இறக்கும்வரை ஒரு எஜமானனின் கீழ் உழைத்து ஒடுங்கித் துன்புற்று வாழவேண்டியிருந்தது.

(மாமேதை கார்ல் மார்க்சின் “மூலதனம்’ என்னும் உலகப் புகழ் பெற்ற நூல் 1867 – ஆம் ஆண்டு வெளியானது. இது பொருளாதாரச் சித்தாந்தம் குறித்த நூலாகும். இந்த நூலில், எட்டு மணி நேர உழைப்பைக் கோரும் இயக்கத்தைப் பற்றி “வேலை நாள் குறித்து’ என்னும் தலைப்பில் மார்க்ஸ் எழுதியுள்ளார்).

அத்துடன் அந்தக் கூட்டமைப்பு, மே 1, – 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணமாகும்.

1886 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. பிறகு, தொழில் நகரங்களான சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க், பிலடெல்பியா, மில்வாக்கி, சின்சினாட்டி, பால்டிமோர், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த எழுச்சி மிக்க வேலை நிறுத்தத்தால் அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து தடைபட்டது. தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கின.

சிகாகோ பேரெழுச்சி

“மெக்கார்மிக் ஹார்வெஸ்டிங் மெஷின்’ என்பது ஒரு தொழில் நிறுவனம். 1886 – ஆம் ஆண்டு மே 3 – ஆம் நாளன்று இந்த நிறுவனத்தின் வாயிலில் 3000 -த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டனர். கண்டனக் கூட்டம் நடத்தினர். “சிகாகோ கமர்ஷியல் கிளப்’ என்பது முதலாளிகள் சங்கம். இந்தச் சங்கம், தொழிலாளர்களின் போராட்டத்தை, வேலை நிறுத்தத்தை முறியடித்தே ஆகவேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டது. முதலாளிகள் சங்கம் இரண்டாயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளை வாங்கியது. இந்தத் துப்பாக்கிகளை “இலினாய்ஸ் தேசியப் படை’யிடம் கொடுத்து, வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக்கொண்டது. முதலாளிகள் சங்கத்தின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

“அனார்க்கிஸ்ட்’ என்பது ஒரு தொழிலாளர் அமைப்பு. இந்த அமைப்பு, தொழிலாளர்கள் மீது இலினாய்ஸ் தேசியப் படை நடத்திய காட்டுத்தனமான தாக்குதலைக் கண்டிப்பதற்காக ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டம் மே 4- ஆம் தேதி, “ஹே மார்க்கெட் சதுக்கம்’ என்னுமிடத்தில் நடந்தது. கண்டனக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது இலினாய்ஸ் தேசியப் படையைச் சேர்ந்த 180 பேர் வந்தார்கள். கலைந்து செல்லும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதனால், கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கினார்கள். அப்போது திடீரென்று தேசியப் படையினர் மீது ஒரு குண்டு வீசப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர்.

கோபம்கொண்ட தேசியப்படையினர், தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அதைக் காரணம் காட்டி, தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்கு முறை ஏவப்பட்டது. தொழிலாளர் இயக்கத்தை முன்னின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த எட்டுபேர் மீது, கொலை சதித் திட்டம் தீட்டியதாக வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, தூக்குத் தண்டனையும் விதித்தது.

அனார்க்கிஸ்ட் தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களான, “ஆகஸ்ட் ஸ்பைஸ்’, “ஆல்பர்ட் பார்சன்ஸ்’, “அடால்ஃப் ஃபிஷர்’, “ஜார்ஜ் ஏங்கல்’ ஆகிய நான்குபேர் 1887 – ஆம் ஆண்டு நவம்பர் 11 – ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். “லூயி லிங்க்’ என்னும் இன்னொரு தலைவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

கொல்லப்பட்ட தொழிலாளர் தலைவர்களுக்கான இறுதி ஊர்வலம் 1887 – ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 – ஆம் நாள் நடந்தது. அந்த ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதிலுமிருந்து ஐந்து லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் அமெரிக்கா முழுதும் “கறுப்பு தினமாக’ அனுசரிக்கப்பட்டது. சிறைபட்டிருந்த மற்ற மூன்று தலைவர்கள் 1893 – ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

1888 – ஆம் ஆண்டு செயின்ட் லூயியில் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு கூடியது. அப்போது எட்டு மணி நேர வேலை இயக்கத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. அப்போது அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் “சாமுவேல் கோம்பர்ஸ்’ என்பவர்.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 – ஆம் ஆண்டு ஜூலை 14 – ஆம் நாள் அன்று, பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் “சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’ மாநாடு கூடியது. (இந்தக் கூட்டத்தை இரண்டாவது அகிலம் என்பார்கள்). இதில் பிரடெரிக் ஏங்கல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சிகாகோ சதியை கடுமையாகக் கண்டித்தார்கள். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணிநேரப் பணிக்கான போராட்டத்தைத் தொடர்வது என்றும், 1890, மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிலாளர்கள் அனைவரும், எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்கவேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும், அதற்கான இயக்கமும் வலிமை பெற்றன. நாளொன்றுக்கு எட்டுமணி நேரம் மட்டும் உழைக்கும் உரிமையும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் உலகம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வரத் தொடங்கின. உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்தோடு பார்க்கக் கற்றுக்கொண்டது.

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலில் நிலைநாட்டப்பட்டது.

பெரும் போராட்டங்கள்தான் மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தன. இன்றைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!’ என்பதுதான் மே தினம் நமக்கு அளிக்கும் முழக்கமாகும்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *