Breaking
Fri. Jun 20th, 2025

கடந்த 10 வருடங்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் செய்யமுடியாதவற்றை 30 நாட்களில் நாம் செய்துள்ளோம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழு நாடாளுமன்றத்தையுமே ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, மக்களுக்கு மேலும் நன்மைகளை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாது, இளைஞர் யுவதிகளின் மனதில் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்போம்’ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

‘மனுசத் மினுசுன் பலயய்- ரட சுரகின் மஹா பவுரய்’ என்ற தொனிப்பொருளில், பதுளை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (28), கட்சியை ஆதரித்து நடாத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

நாம் இந்நாட்டில் வாழும் மக்களின் சவால்களை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டோம். ராஜபக்ஷவின் ஆட்சி வெளியே தூக்கி எறியப்பட்டுவிட்டது. பெற்றோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் 30 நாட்களுக்கு செய்து முடித்தோம். ஆனால், 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த மஹிந்தவின் அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியவில்லை.

நெல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையும் உயர்த்தப்பட்டது. தேயிலை மற்றும் இறப்பருக்கான நிவாரணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாது, தனியார் துறையில் தொழில் புரியும் ஊழியர்களின் சலுகைகள் தொடர்பாக 43 ஊதியக்குழுக்களுடன் கலந்துரையாடியுள்ளோம். ஒரு மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக உத்தேசித்துள்ளோம். இதனால் அவர்களது வருமானத்தையும் அதிகரிக்க உத்தேசரித்துள்ளோம்.

அரச மற்றும் அரசியல் பொருளாதாரங்கள் நிறுவப்படவேண்டும். நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றோம். அவர்களும் எமக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றனர். தேங்காய் உற்பத்தி, மீன்பிடித்துறை அனைத்தும் அபிவிருத்தி அடைதல் வேண்டும். அதனுடன் சேர்ந்து கல்வி மற்றும் சுகாதார துறைகளும் அபிவிருத்தி காண வேண்டும்.

எனவே, நாடாளுமன்ற தேர்தலின் போது, உங்களுடைய ஆதரவை வழங்குங்கள். ராஜபக்ஷவின் அராங்கத்தை மீண்டும் உள்நுழைய பொதுமக்கள் இடமளிக்கக்கூடாது. ஜனாதிபதி, சில கட்சியின் தலைவர்கள் அவர்களுடன் இணைந்து நானும் ஒரு புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம். ஊழல் மற்றும் மோசடிகளை குறித்தான விசாரணைகளை நடாத்துவதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Related Post