Breaking
Tue. Dec 9th, 2025

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் என்ற கிராமத்தில் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பாத்திமா சீமா சோதரியின் நினைவாக எழுதப்பட்ட கவிதை.

சிதைக்கப்பட்ட செந்தாமரை சீமா..!

 

ஆத்தோரம் மடுத்தோண்டி
அதில்
ஐரி மீன்களை ஓடவிட்டு
பிடித்து விளையாடிய
பிஞ்சு மகள் சீமா..!

துள்ளி விளையாடும் உன்னை
கயவன்
கிள்ளி எறிந்த செய்தி
காது வழியாகச் சென்று
கண்கள் வழியாக வெளியே வந்தது.

உன்
பால் வடியும் முகம் கண்டுமா
இந்தப் பாதகன்
தேசமாக்கினாhன் உன்னை..
செத்திருக்க வேண்டும் அவனல்லவா..?

உன்
கெஞ்சல் கூடவா கேட்கவில்லை
இந்த
கேடு கெட்ட நாய்க்கு..?

இவனை
கொதிக்கும் எண்ணையில்
குளிப்பாட்டிருக்க வேண்டும்.
என்றுதான்
உள்மனது ஒப்பாரி வைக்கிறது.

பள்ளிப் பருவம்
எத்தனை இலட்சியங்கள்
உன்
உள்மனதில் உட்கார்ந்திருக்கும்
அத்தனையையும்
அழித்து விட்டான் அயோக்கியன்.

கனிகளை உண்டபின்
காக்கைள் கூட
விதைகளை விட்டுவிடும்
இந்த நாய்
அதைக்கூட விழுங்கி விட்டதே..!

இவையெல்லாம்
அயல் நாட்டுச் செய்திகள்தான்
இப்போது
உள்வீட்டுக்குள் வந்து
உட்கார்ந்து கொள்கிறன..

விசாரிப்போடு
விலகிப் போனவர்களே..!
கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்
இந்த
அநியாயங்களுக்கெதிராக…

பெற்றோர்களே..!
பெண்பிள்ளைகள் விடயத்தில்
பெரிதும் கவனமெடுங்கள்.

தாய்மார்களே..!
நீங்கள்
சின்னத் திரைகளில்
சிறைபட்டிருக்க
உங்கள் சின்னக் குழந்தைகள்
சீரழிக்கப்படுகிறார்கள்
சிந்தித்துப் பாருங்கள்

நம்
குலக் கொழுந்துகளை
கொடிய மிருகங்களின
குறியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்..

                                                              –   மதியன்பன் –

Related Post