Breaking
Sun. Jun 15th, 2025

சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் போராடி வரும் ISIS இயக்கத்தில் இணைவதற்காக வெளிநாடுகளில் இருந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அபாய மட்டத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்கத் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க தேசிய தீவிரவாத எதிர்ப்பு நிலையத்தின் இயக்குனர் நிக்கொலஸ் ரஸ்முஸ்ஸென் கருத்துத் தெரிவிக்கையில், ISIS இயக்கத்தில் இதுவரை 90 இற்கும் அதிகமான நாடுகளில் இருந்து 20 000 இற்கும் அதிகமான போராளிகள் சென்று சேர்ந்திருப்பதாகக் கூறியுள்ளார். புதன் கிழமை ஒழுங்கு செய்யப் பட்டிருந்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு கமிட்டியின் சாட்சியத்தின் அடிப்படையில் இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் ISIS இல் சேரும் நோக்கிற்காக வெளிநாடுகளில் இருந்து சிரியாவுக்குச் சென்றுள்ள போராளிகளின் எண்ணிக்கை வீதம் எதிர்பார்த்திராத ஒன்று என்றும் கூறிய ரஸ்முஸ்ஸென் கடந்த 20 வருடங்களில் ஒரு வருடத்தில் எந்த ஒரு காரணத்துக்காகவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், யேமென் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ள வெளிநாட்டு மக்களின் தொகையையும் இது மிஞ்சி விட்டதாகவும் கூறியுள்ளார்.

கணிக்கப் பட்டுள்ள 20 000 பேரில் 3400 பேர் மேற்குலகைச் சேர்ந்தவர்கள் எனவும் அமெரிக்காவில் இருந்து மட்டும் 150 பேர் ISIS இற்குச் சென்று சேர்ந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக சமூக வலைத் தளங்கள் ஊடாக ISIS உலகின் மூலை முடுக்குகளில் இருந்தும் தனது இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் விதமாக பிரச்சாரம் செய்வதும் அல்கொய்தாவை விட மிகத் திறமையாகச் செயற்படுவதும் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post