மன்னார் மாவட்டத்தின் முருங்கன் மற்றும் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கு வியாழக்கிழமை (16) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், வைத்தியசாலைகளுக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களையும் கையளித்தார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா மற்றும் Dr. ஒஸ்மன், Dr. கியாஸ், கட்சியின் முக்கியஸ்தர்களானா பைறூஸ், சாஹிர், ஞானராஜ், சந்திரிக்கா, ராபி மௌலவி, ஜௌசி, ஹலீம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!
சமூக சிந்தனையும் தற்றுணிவும்கொண்ட ஒரு கல்விமானை எமது சமூகம் இழந்து நிற்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார்.
முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரும் நாடறிந்த கல்விமானுமாகிய எம்.எம்.சியான் அவர்களின் மறைவு தொடர்பில், அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“கல்வியையே தன்னுடைய வாழ்க்கையாகக்கொண்ட மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள், மன்னார், தாராபுரத்தை பிறப்பிடமாகக்கொண்டவர்.
சியான் அவர்கள் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய காலமானது ஒரு பொற்காலமாகும். இந்தக் காலத்தில், இவரிடம் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் இன்று சிறந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இயற்கையாக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடையான, எவ்விடத்திலும் தான் ஒரு கல்விமான் என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு துணிந்து, தமது கருத்துக்களை வெளியிடும் ஆற்றலைக் கொண்டிருந்ததுடன், தரவுகளையும் சட்டென சமர்ப்பிக்கும் ஒருவராகவும் மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்களைக் கூறமுடியும்.
குறிப்பாக, இடப்பெயர்வுக்கு பின்னர், இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மிகவும் நெறிப்படுத்தி, அதனை முன்கொண்டு செல்வதிலும், பல நுறு ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுப்பதிலும் எம்முடன் இணைந்து, அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் பணியாற்றிய காலத்தை, இத்தருணத்தில் நாம் நினைவுகூர்வது பொருத்தமாகும்.
நான் பிறந்த மண்ணான தாராபுரத்தை சேர்ந்த ஒருவரான மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள், எனது நெருங்கிய உறவினருமாவார். கடந்த காலங்களில், எமக்கு ஏற்பட்ட பலவித துன்பங்களின்போது, எமது நலனில் அக்கறையுடன், அடிக்கடி தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய தருணங்களை எண்ணிப் பார்க்கின்றேன்.
எமது ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களில் முக்கியமான ஒருவராக மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள் திகழ்ந்துள்ளார். அதேபோன்று, சமூகம் மற்றும் கல்வி சார்ந்த விடயங்களை முற்படுத்தி, அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ‘எவ்வாறு இந்த அடைவுகளை அடைந்துகொள்வது’ என்பது பற்றி பல நல்ல ஆலோசனைகளை வழங்கியவராகவும், நோயுற்றபோதும் அந்த எண்ணம் தொடர்ந்தும் அவரிடம் நீடித்தமையானது, இன்றும் பசுமரத்தாணிபோல் என் மனதில் மீட்டி நிற்கின்றது.
‘கற்பவனாக இரு அல்லது கல்விக்கு உதவி புரிபவனாக இரு’ என்கின்ற பழமொழிக்கு ஒப்ப, மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள் நீண்ட கல்விப்புலத்தை கொண்டிருந்தமை, கற்கின்ற சமூகத்திற்கு உந்துதலாக இருந்ததை இன்றும் நாம் நினைவில்கொள்கின்றோம்.
தாம் பெற்ற கல்வியின் மூலம், அரசியல் உந்துதல்களின்றி பொறுப்பான பதவிகளை அவர் பெற்றுக்கொண்டார். குறிப்பாக, புத்தளம் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளராக இருந்து, உள்ளூர் மாணவச் சமூகத்திற்கும், அதேபோன்று, இடம்பெயர்ந்து வந்த மாணவர்களின் கல்விக்காகவும் வளங்களைப் பெற்று, அதனூடாக தமது கல்வியின் இலக்கை நோக்கிப் பயணத்தை முன்னெடுத்த காலத்தை என்றும் மறக்க முடியாது.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் சேவைகளைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அருள்வானாக! ஆமீன்!!!”
ஏறாவூர், ஐயன்கேணி லிட்டில் வொண்டர் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர்களின் விடுகை நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) ஏறாவூர் மட்/மம/ அல் ஜுப்ரியா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான M.S.சுபைர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறார்களை வாழ்த்தி பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட, ஆயிலியடி சாஹிரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகரசபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சியானின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில்,
“காலம் சென்ற கல்விமான் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் சியான் அவர்களின் மறைவு கல்வி உலகிற்கு பேரிழப்பாகும். புத்தளம், மன்னார் கல்வி வலயங்களில் பணியாற்றி பலரது வளர்ச்சிக்கு தூணாகவும் துணையாகவும் இருந்தவர்.
இவரது இழப்பால் துயரும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க இறைவனை பிராத்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (14) காலை, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
அஹதியா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் உவைஸ் முஹம்மட், ஹைதராபாத் KIMS வைத்தியசாலையின் பொதுமுகாமையாளர் சுனில் தெஹ்ரி, களுத்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஆமிர் நாசிர், களுத்துறை உதவி பொலிஸ் அத்தியகட்சர் இனோகா லியானகே, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நப்றாஸ் நில்பர், களுத்துறை மாவட்ட அஹதியா சம்மேளனத் தலைவர் உவைன், செயலாளர் ஹிசாம் சுஹைல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மூத்த உலமாவும் புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு, ஆன்மீகத் துறையில் பெரும் இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் உயர் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“ஆன்மீக சமூகத்தை உருவாக்குவதற்காக அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் முழுமையான பங்களிப்பை செலுத்தியுள்ளார். இலங்கையில் பழைமை வாய்ந்த அரபு மதரஸாக்களில் ஒன்றான காசிமியா அரபுக் கல்லூரியின் அதிபராக நீண்ட காலம் பணியாற்றி, சிறந்த உலமாக்களையும் துறை சார்ந்தவர்களையும் இந்த சமூகத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ள ஒருவராக அவரை அடையாளப்படுத்த முடியும்.
ஆன்மீகத் துறையோடு மட்டும் தன்னுடைய பணியை நிறுத்திவிடாது, சமூகம் சார்ந்த எல்லா துறைகளிலும் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள், அவரது பங்களிப்பினை குறையின்றி வழங்கியுள்ளதை நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.
அரசியல், கல்வி, பொருளாதாரம், இன ஒற்றுமை போன்ற விடயங்களில், மிகவும் ஆரோக்கியமான முறையில் அவரது பங்களிப்பை வழங்கியமை, இந்த புத்தளத்து மக்களுக்கு அவரால் ஆற்றப்பட்ட மிக உயர்ந்த பங்களிப்பாகும்.
அவரது காலப்பகுதியில், காசிமியா அரபுக் கல்லூரியின் நாமத்தை முழு உலகறிய செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அளப்பரியது. அதிலும் குறிப்பாக, காசிமியாவின் ஸ்தாபகரும் அதிபரும் அவரது தந்தையுமான மஹ்மூத் ஹசரத் அவர்களுக்காக, நினைவு முத்திரை ஒன்றை அரசாங்கத்தினால் வெளியிட்டு வைப்பதற்கான அடித்தளத்தையிட்டது மட்டுமல்லாமல், அவற்றை வெளியிடுவதற்கு எம்முடைய பங்களிப்பையும் பெறுவதில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்ட ஒருவர்.
குறிப்பாக, இன ஒற்றுமையை ஏற்படுத்துவதில் நடுநிலையாக சிந்திக்க கூடியவராகவும் பிரச்சினைகளை மிகவும் சாதுரியமாகத் தீர்த்து, மீண்டும் அனைத்து மக்களும் அன்புடன், பரஸ்பர புரிந்துணர்வுடன் செயலாற்றுவதற்கான இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தவர். அவரது சமூகப்பற்றை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களுடைய இழப்பானது, புத்தள சமூகத்துக்கு மிகவும் நீண்ட இடைவெளியினை தோற்றுவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன், அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அன்பையும் கருணையையும் பொழிய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி – தலைவர் ரிஷாட்!
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என்றும் கோட்டா மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச். நந்தசேன மற்றும் டியுடர் குணசேகர ஆகியோர் தொடர்பில், இன்று இந்த விவாதம் மும்மொழியப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் நாட்டுக்கு பல நல்ல பணிகளைச் செய்தவர்கள்.
குறிப்பாக, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அவர்களுடன் நீண்ட காலம் பழகக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. அவர் ஒரு அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, இந்த நாட்டுக்கு நிறைய நல்ல பணிகளை செய்த ஒருவர். அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், போக்குவரத்து துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை செய்தவர். அவருடைய காலத்திலேதான், இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று, வடக்கு, தெற்குக்கான ரயில் பாதை, யாழ்ப்பாணம், கொழும்பு ரயில் பாதை மற்றும் மன்னார் ரயில் பாதை ஆகியவற்றின் புனரமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல நல்ல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று, பல இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கினார். அவர் நேர்மையான, பண்பான ஒரு அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். களுத்துறை மாவட்டத்தில், ஒவ்வொரு தேர்தலிலும் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று, வெல்லக்கூடிய ஒருவராக இருந்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ஷவை அந்தக் கட்சி முன்னிறுத்தியபோது, அந்தக் கட்சியிலேயே இருந்துகொண்டு, அவர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளராக இருந்தவர் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டும், அவரை எதிர்த்துப் பேசியவர். “கோட்டா இந்த நாட்டுக்கு தகுதியானவர் அல்ல, ஒரு பிரதேச சபை உறுப்பினராகக் கூட பணியாற்றாதவரிடத்திலே, ஜனாதிபதி பதவியை எவ்வாறு ஒப்படைக்கப் போகின்றீர்கள்?” என்று, தைரியமாக பேசிய ஒருவர்தான் குமார வெல்கம அவர்கள். அவர் எதையும் நேர்மையாக, வெளிப்படையாக பேசுகின்ற, பக்குவமுள்ள ஒரு அரசியல்வாதி.
அதுபோன்று, “அரகல” சமயத்தில், ஒரு சில அநியாயக்காரர்கள் அவரை அடித்துக் காயப்படுத்தி, கஷ்டமான நிலைக்கு ஆளாக்கினர். எனினும், அவர் யாரையும் கடிந்துகொள்ளாமல், அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவருடைய பணிகளை முன்னெடுத்து வந்தார்.
குமார வெல்கம அவர்களுடைய இழப்பு, இந்த நாட்டுக்கு குறிப்பாக, களுத்துறை மாவட்ட மக்களுக்கு பாரிய இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது கட்சி சார்பாக, ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோன்று, எச். நந்தசேன அவர்கள், நான் திருமணம் முடித்துள்ள மதவாச்சிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகுகின்ற ஒருவர். வட மத்திய மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, பதில் முதலமைச்சராக இருந்து, அந்த மாகாணத்துக்கு நிறைய சேவைகளைச் செய்தவர்.
பாராளுமன்ற உறுப்பினராக ஒருமுறைதான் அவரால் வெற்றிபெற முடிந்தது. எனினும், அந்தக் காலப்பகுதியில், அனுராதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக, மதவாச்சிய தொகுதிக்கு பல நல்ல பணிகளைச் செய்திருக்கிறார். அவருடைய இழப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும். இத்தருணத்தில், அவரது உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும், அனுராதபுர மாவட்டத்தின் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை, கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், டியுடர் குணசேகர அவர்கள் 1977இல், கம்பஹ மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். அதன் பின்னர், போலாந்து நாட்டின் தூதுவராக இருந்து பணியாற்றியவர். அவர் ஒரு செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய காலத்தில், ஒரு அரசியல்வாதியாக இருந்து அந்த மாவட்டத்துக்கு பல சேவைகளை செய்திருக்கிறார். அதேபோன்று, ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்காக, பல தியாகங்களை செய்த ஒருவர். எனவே, அவரது குடும்பத்தினருக்கும் எனது கட்சி சார்பில், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி” என்று குறிப்பிட்டார்.
– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை!
சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில், மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். 75 வருடங்களாக, பாரம்பரிய கட்சிகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. எனவே, ஏனையவர்களைப் போன்று, நீங்களும் பொடுபோக்குத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதில், மக்கள் உன்னிப்பாக இருக்கின்றனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் எகிறி வருகின்றது. இன்னும் நாட்டில் சாதகமான சூழல் ஏற்படவில்லை. அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியமான சில பொருட்களின் விலைகளையாவது, குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி விலையில் கூட மக்களுக்கு இன்னும் விமோசனம் கிடைக்கவில்லை. அன்றாட வயிற்றுப் பசிக்கான உணவைக் கூட சாதாரண விலைக்கு வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், உப்புப் பிரச்சினை உட்பட சில துரிதமாக தீர்க்கக் கூடிய விடயங்கள் இருப்பினும், அவற்றை ஏன் காலதாமதப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
அதேபோன்று, தலைமன்னார் பங்குத் தந்தை டெனி கலிஸ்ரஸ் எமக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். பிரதமருக்கு முகவரியிட்ட கடிதத்தின் பிரதியே அது. அதாவது, மன்னாரில் 18990 ஹெக்டெயர் நிலப்பரப்பானது, வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனவிலங்கு திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பிரபல்யமான மன்னார் தீவில் இவ்வாறான வர்த்தமானி பிரகடனங்கள் மூலம், சுற்றுலாத்துறை மற்றும் இன்னோரன்னை துறைகளை கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை கவனத்தில் எடுக்குமாறு வேண்டுகின்றேன்
யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில், 2009-2010 ஆண்டு பயிற்சிகளை நிறைவு செய்த 237 ஆசிரியர்களுக்கு, இதுவரையில் அவர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. கல்வி அமைச்சர் ஹரினி அவர்கள், இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, அவசரமாக அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
அதேபோன்று, இலங்கையிலே 400க்கு மேற்பட்ட நூலக உதவியாளர்கள் பணியாற்றுகின்றார்கள். அந்தவகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக உதவியாளர்கள் உட்பட பலர் சம்பள மறுசீரமைப்பு விடயத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 20212ஆம் ஆண்டுக்கு பிற்பாடு, பல்கலைக்கழக நூலக உதவியாளர்களை, சிற்றூழியர்களின் தரத்துக்கு பதவி இறக்கம் செய்ததன் மூலம், நூலக உதவியாளர்கள் பெரும் மனஉளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கின்றனர் எனவே, 2012க்கு முன்னர் இருந்த அதே பதவி நிலையில், அவர்களது நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால், மன்னார் தீவு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சேதமடைந்துள்ள பாதைகளை சீரமைப்பதுடன், முறையான வடிகான் அமைப்பு உள்ளிட்ட இன்னோரன்ன உள்கட்டமைப்புக்கள் சீரமைக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் எந்தவொரு நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை. இந்த விடயத்தையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, வவுனியா, சாளம்பைக்குளத்தில் குப்பைகூளங்களைக் கொண்டுவந்து கொட்டுகின்றார்கள். அந்தப் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றும் அமைந்துள்ளது. எனவே, இந்தப் பகுதியில், வைத்தியசாலை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது அருகில் அமர்ந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மத் அவர்களும் அந்த ஊரைச் சேர்ந்தவரே. கடந்த கால கோட்டாவின் அரசாங்கம், இவற்றையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே, இந்த அரசாங்கத்திலாவது மேற்படி பிரச்சினைக்கு, மாற்றுவழி ஒன்றை கண்டறிந்து, விரைவில் தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மேலும், அண்மையில் மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் முல்லைத்தீவில் கரையொதுங்கி, திருமலையில் வைக்கப்பட்டிருந்தபோது, நான் அவர்களை பார்வையிட சென்றிருந்தேன். அவர்களுடன் கலந்துரையாடுவதை பொலிஸார் தடுத்து, எமக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது. 3 இலட்ச அகதிகளுக்கு, அரசாங்கத்தின் உதவியுடன், பல மாதங்கள் மூன்றுவேளை உணவு வழங்கி பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டேன். எனவே, ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை மன வருத்தத்தை தோற்றுவித்தது. படுப்பதற்கு பாய், தலையணை கூட அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. பிரதேச செயலாளரின் அனுமதியுடனேயே நான் அங்கு சென்று, அவர்களுக்கு தேவையான சில உதவிகளை செய்தேன்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எங்களுடன் இரண்டு தசாப்தகாலமாக இந்த பாராளுமன்றில் இருந்தவர் என்ற வகையில், அவரது நற்பண்புகளை கண்டிருக்கின்றோம். அவரது பேச்சு மற்றும் வாக்குறுதிகள் மீது நம்பிக்கைகொண்டுதான், மூவின மக்களும் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். இந்த அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு எமது நாட்டுக்கு அகதிகள் வருகின்றபோது, சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அந்தவகையில், இந்த மியன்மார் அகதிகள் விடயத்திலும் மனிதாபிமான ரீதியில் செயற்படுங்கள்.
மியன்மார் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு சில குழுக்களினாலோ, அங்குள்ள முஸ்லிம் மக்களை கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெறுகின்றன. இதனால், 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் உயிர்களை பாதுகாக்க பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். அதுபோலவே, எங்கோ சென்ற இந்த அகதிகள், துரதிஷ்டவசமாக இலங்கையில் கரையொதுங்கியுள்ளனர். எனவே, அவர்களை சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது நியாயமில்லை. அவ்வாறு அனுப்பும் பட்சத்தில், இதைவிட பெரிய கொடுமை ஏதும் இருக்காது.
எனவே UNHCR மற்றும் ஐ.நா நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அகதிகளை தாம் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டிலிருந்தும் இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள், வேறு நாடுகளில் மகிழ்ச்சியுடன் நல்ல நிலையில் வாழ்கின்றனர். எனவே, சர்வதேச நடைமுறையை மதித்து செயற்படுங்கள். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இவ்வாறு வந்த அகதிகளை முறைப்படி தாம் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்ததை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன். அதேபோன்று, மியன்மார் அகதிகளுக்கு உதவி செய்ய விரும்புபவர்களை தடுக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.
முள்ளிப்பொத்தானை, புஹாரி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதம ஆசிரியை சவ்ஜானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, விழாவினை சிறப்பித்திருந்தார்.