கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட அதிகளவான கடன்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இவற்றினால் நாட்டு மக்களுக்கு பொருளாதார சுமை அதிகரித்துவிடாதவாறு பார்த்துக் கொள்வது தொடர்பில் புதிய தேசிய அரசாங்கம் அக்கறை செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் க்ரீட் லோச்சன் நேற்று திங்கட்கிழமை நிதியமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆபத்தான நிலைமையிலுள்ள எமது பொருளாதாரம் வாழ்க்கைச் செலவு என்னும் பெயரில் எந்த வகையிலும் பொது மக்களை பாதிக்கக்கூடாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.
ஒப்பீட்டளவில் நாம் அதிக கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். எமது பொருளாதாரம் தற்போது சரிவடைந்துள்ளது. அதற்கு காரணம் ஊழல், மோசடிகளாகும். இந்த பின்னடைவினை மக்கள் மீது திணிக்காது இவற்றிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளில் நாம் களமிறங்கியுள்ளோம்.
அந்தவகையில் இந்தியா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, நோர்வே ஆகிய நாடுகளுடன் நாம் தனித்தனியாக பேச்சு நடத்தி வருகின்றோம். சர்வதேச மட்டத்தில் பல தேவைகள் உள்ள போதும், பின்னடைந்துள்ள பொருளாதார நிலைமையை மீளக்கட்டியெழுப்ப ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே எமது பிரதான குறிக்கோளாகவுள்ளது.” என்றுள்ளார்.

