Breaking
Sat. Apr 27th, 2024

“கல்முனை பிரச்சினை என்பது தீர்க்கப்பட முடியாத ஒன்றல்ல. தமிழ் தரப்பு மக்கள், அரசியல்வாதிகளுக்கும் இதன் உண்மை நிலையை உணர்த்துவதற்கு அதிகாரத்திலிருந்தவர்கள் முயற்சிக்கவில்லை. அதனால்தான் தேர்தல்கால பிரச்சாரத்திற்காக இதனை எல்லோரும் பயன்படுத்துகின்றார்கள்” என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

கல்முனையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்று உரையாற்றிய வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறியதாவது,

“கல்முனை விடயத்தில் பூரணமாக அறிவில்லாத போது, அதுசார்ந்த வரலாறு தெரிந்தவர்களுடன் கலந்தாலோசித்து, ஆகக்குறைந்த அறிவுடனாவது குறித்த விடயத்தில், அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், குறித்த விடயத்தில் பூரணமான தெளிவில்லாமல், எல்லைப் பிரச்சினை இருக்கின்றது என்று மட்டும் கூவித்திரிந்து, கல்முனை பிரதேச மக்களை ஏமாற்றி, இந்த பிரச்சினையை தொடர்ந்தும் இருதரப்பு அரசியல்வாதிகளும் பயன்படுத்தியதைத் தவிர, வேறு எந்த காத்திரமான நடவடிக்கைகளும் இங்கு எடுக்கப்படவில்லை. இதற்குள் “கல்முனை காவலன்” என்ற பெயரை வேறு வைத்துக்கொண்டு, காலாகாலமாக இங்குள்ள மக்களையும் மண்ணையும் ஏமாற்றுகின்ற நிலையில், கல்முனை விடயத்தை தேர்தலுக்கான ஆயுதமாக இம்முறையும் பிரச்சாரம் செய்து, மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

ஆனால், இம்முறை எந்த பசப்பு வார்த்தைகளும் கல்முனை மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, அம்பாறை மாவட்ட மக்களிடமும் எடுபடாது. மக்கள் விழித்துக்கொண்டார்கள் என்பதை. இன்று கல்முனை காவலர்களாக தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

கடந்த சுமார் 18 வருடகாலமாக, முஸ்லிம்களின் முகவெற்றிலையான கல்முனை மட்டுமல்லாது, முழு அம்பாறை மாவட்ட மக்களையும் வாக்குப் போடுகின்ற இயந்திரங்களாக பயன்படுத்திய நிலை மாறி, இன்று மாற்று அரசியலுக்காக மக்கள் தயாராகி வருகின்றார்கள். படித்த,  பண்புள்ள, திறமையுள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்ப, அம்பாறை மாவட்ட மக்கள் இன்று உறுதிபூண்டுள்ளதோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்கள் நாளுக்குநாள் அணிதிரண்டு கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

எமது கட்சி சார்பாக, என்னை முதன்மை வேட்பாளராகக்கொண்டு, களமிறங்கியிருக்கின்ற அனைத்து வேட்பாளர்களும் தகுதிவாய்ந்தவர்கள் என்ற அடிப்படையில், நாம் இம்முறை வரலாற்றில் முதல்முறையாக இரண்டுக்கு மேற்பட்ட ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது.

எனவேதான், எமது வெற்றியின் பங்காளர்களாக அம்பாறை மாவட்ட மக்கள் மாறுவதோடு, இம்முறை சவால்மிக்க பாராளுமன்றத்தை புதிய மாற்றத்துடன், புதியவர்களுக்கு வாய்ப்பினை வழங்கி, சவாலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Related Post