Breaking
Thu. May 2nd, 2024
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில அரசியல்வாதிகள், தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே  பாராளுமன்றம் செல்லத் துடிக்கிறார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
தன்னை ஆதரித்து, ஓட்டமாவடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
“வரவுள்ள பாராளுமன்றம் சுகமான பாராளுமன்றமாக இருக்கும் என்றெண்ணி, பாராளுமன்றம் செல்ல சிலர் ஆசைப்படுகின்றனர். அது சுமையான பாராளுமன்றம் என்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நான் சொல்ல வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் ஒரு பெரும்பான்மை இன தலைவராக இருக்கின்ற, கௌரவமிக்க சபாநாயகராக இருந்த கரு ஜயசூரிய அவர்களுக்கு, கடந்த பாராளுமன்றத்தில் மிளகாய் தண்ணீர் ஊற்றி, அவரின் தொலைபேசியை உடைத்து, பெறுமதியான புத்தகங்களை கிழித்து, அவரை அசிங்கப்படுத்திய அதிரடிப் பாராளுமன்றத்துக்குள், எவ்வாறு நாங்கள் இருந்து செயற்படப் போகிறோம்? என்பதிலே எங்களுக்கு அச்சம் இருக்கிறது. வரவுள்ள பாராளுமன்றத்தில் எங்களை கைதிகளாக வைத்துக்கொண்டு, கை உயர்த்தச் சொல்வார்களா? என்ற அச்சமும் எங்களுக்கு இருக்கிறது.
சிலர் தங்களின் சொத்துக்களையும், பணத்தையும், காணி, கட்டடங்கள் போன்றவற்றை பாதுகாப்பதற்காக வேண்டியே பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கின்றனர். அதற்காக வேண்டி மக்களின் வறுமையை பயன்படுத்தி, பணமும் உணவுப் பொருட்களும் கொடுத்து வாக்குக் கேட்கின்றனர்.
இதனால்தான் நாங்கள் சொல்கின்றோம், பாராளுமன்ற விதிமுறைகளை அறிந்த, அரச தலைவர்கள் பேசுகின்ற உடல் மொழிகள் போன்றவற்றை தெரிந்து கொண்ட, ஆளுமை மிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் தலைவர்களை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.
அதற்காக வேண்டிதான் கட்சி ரீதியாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் எங்களோடு முரண்பட்டுக் கொண்டாலும், “அவர் கண்டி மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் கட்டாயமாக வெற்றிபெற வேண்டும்” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கண்டி மாவட்ட மக்களை வேண்டிக் கொண்டுள்ளது. அதற்காக நீங்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.
அதே போன்றுதான் ரவூப் ஹக்கீம்,  வன்னிக்குச் சென்று “ரிஷாட் வெற்றிபெற வேண்டும். அவருக்கு மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இவ்வாறு முஸ்லிம் சமூகத்தியின் நலனுக்காக, பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இம்முறை தேர்தலில் ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரமே முஸ்லிம்கள் பெறுவார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெறவுள்ள ஐந்து ஆசனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி  ஒரு ஆசனத்தையும், பிள்ளையான் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்வார்கள். இதுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் கள நிலவரம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

Related Post