Breaking
Fri. Apr 26th, 2024

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிதத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், இந்த நாட்டில் இனவாத,மதவாத்திற்கு எதிரான எல்லோரும் சந்தோஷமாக வாழக் கூடிய ஒரு நாட்டை கட்டி எழுப்பக் கூடியவராக சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டிருப்பதாகவும் கூறினார்.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் புதன் கிழமை மாலை இடம் பெற்ற ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐ.தே.கவின் பிரதித் தலைவரும், ஐ.தே.மு ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களாக பாலித்த ரங்கே பண்டார, முஜிபுர் ரஹ்மான், ஹிருனிகா பிரேமச்சந்திர, முன்னாள் பிரதி அமைச்சர்களான நியோமல் பெரேரா, விக்டர் அன்டனி பெரேரா, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி , மும்மதத் தலைவர்கள், உட்பட முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஐ.தே.க, ஸ்ரீ.மு.கா, அ.இ.ம.கா உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

இன்னொரு கூட்டம் வேறு மேடை போட்டு இனவாத,மதவாதிகளின் நச்சுக் கதைகளை பரப்பி இந்த நாட்டை கூறுபோட்டு, சின்னாபின்னமாக்கி நாட்டிலே நிம்தியினையும், பொருளாதாரத்தையும் அழித்து இந்த வெற்றிக்காக அலைந்து திரிகின்றார்கள்.

இதன் மூலம் இவர்களது ஆசையானது எல்லா சமூகங்களும் ஒருவருக்கொருத்தர் சண்டை பிடித்துக் கொண்டும், இன, மத ரீதியாக பிரிந்து கொண்டும் வாழுவதன் மூலமே இந்த சதிகார கூட்டம் அவர்களது வெற்றி இலக்குக்காக பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.இவர்களுக்கு பின்னால் எமது தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் சிலர் திரிவதை பார்க்கின்ற போது வேதனையடைகின்றோம். இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவமிக்க ஒன்றாகும்.

நாட்டில் அமைதியான முறையில் மக்கள் வாழும் சூழலை தோற்றுவிக்கும் தலைவரை தெரிவு செய்கின்ற தேர்தலாகவே நாங்கள் நோக்குகின்றோம். இதற்கு மாற்றமான அணியினர் மீண்டும் இனக்கலவரம் வெடிக்க வேண்டும், இதன் மூலம் தமது ஆட்சி கதிரைகளை அலங்கரித்துக் கொண்டு வாழ வேண்டும்,சிறுபான்மை சமூகங்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகமாக இருக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலுடன் பயணிக்கின்றதை காணமுடிகின்றது. இந்த அணியினரை நிராகரிக்கின்ற தேர்தலாக இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிங்கள மக்கள் வாழும் கிரமாங்களுக்கு சென்று இனவாதத்கை கக்குகின்றார்கள், தமிழ் கிராமங்களுக்கு சென்று, என்றும் இல்லாத அன்பாக பேசுகின்றார்கள். முஸ்லிம் கிராமங்களுக்கு சென்று முஸ்லிம்கள் மீது இரக்கமுள்ளவர்கள் போன்று பேசுகின்றார்கள். மூன்று விதமான பேச்சுக்களை பேசி மக்களது வாக்குகளை அபகரிக்கும் வேலையினை அந்த அணியினர் செய்துவருகின்றார்கள்.

எமது நாடு இது, இங்கு முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்டவர்கள். ஒரு போதும் இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்காதவர்கள், நாட்டின் இறைமையினையும், ஒருமித்த தன்மையினையும் ஏற்றுக் கொண்டு தமது மதக் கடமைகளை அமைதியாக செய்துவருகின்றோம்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல் வங்குரோத்து கொண்டவர்கள் இனங்களுக்கிடையில் சண்டை சச்சரவுகளை தோற்றுவித்து எமது மக்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைச்சங்கிலி இட்டுவிடலாம் என்ற சிந்தனையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவற்றை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறானவர்களின் எண்ணத்தை தவிபொடியாக்கி எல்லா சமூகங்களும் அச்சமின்றி நிம்மதியாக வாழக் கூடிய ஒரு ஜனாதிபதியினை நாம் தெரிவு செய்யும் முக்கியமானதொரு தேர்தல் என்பதை நாம் மறந்து செயற்பட முடியாது.

சஜித் பிரேமதாச இனவாதியோ, மதவாதியோ அல்லர், நாட்டை நேசிக்கின்றவர். நாட்டு மக்கள் சகலரும் சமமானவர்கள், அபிவிருத்திகள் அவர்களை உரிய முறையில் சென்றடைய வேண்டும் என்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சிறந்த திட்டங்களை தம்வசம் கொண்டவர் என்பதை யாவரும் நன்கறிவீர்கள்.

புத்தளத்தை பொறுத்த வரையில் குப்பை பிரச்சினையென்பது ஒரு பாரிய பிரச்சினை. சஜித் பிரேமதாச அவர்களை அண்மையில் கொழும்பில் எனது வீட்டில் வைத்து சந்தித்தோம்.

இந்த கூட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, அமைப்பாளர் அலிசப்ரி, பிராந்திய அமைப்பாளர் யஹ்யா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேச சபைகளின் பிரதி நிதிகள் முன்னிலையில் புத்தளம் குப்பை தொடர்பில் இம்மக்களது மனங்களில் ஏற்பட்டுள்ள வேதனையினை நிச்சயமாக போக்கும் வேலைத்திட்டமொன்றினை தான் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இந்த நிலையில் இந்த தேர்தலில் புத்தளம் தொகுதி மாவட்ட மக்கள், அதிகபட்ச வாக்குகளால் அவரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது மக்களின் இப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என எதிர்பார்ப்பதுடன், புத்தளத்தின் அபிவிருத்தி தொடர்பில் அதிகமான உதவிகளை கொண்டு வரும் ஒரு ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச இருப்பார் என்பதையும் இதன்போது கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Related Post