Breaking
Sat. Apr 27th, 2024

கோதுமை மாவை ஆகக்கூடிய சில்லறை விலையான 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, பேக்கரி உரிமையாளர் சங்கத்தை இன்று காலை (19) சந்தித்த அமைச்சர் ரிஷாட், கோதுமை மாவின் விலையுயர்வை பயன்படுத்தி பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை பாவனையாளரை பாதித்துள்ளதாகவும் எனவே, மீண்டும் பழைய விலையில் பாணை விற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரின் கோரிக்கையை சாதகமாக ஏற்றுக்கொண்ட பேக்கரி உரிமையாளர்கள், கோதுமை மாவின் விலையை மீண்டும் 05 ரூபாவினால் குறைத்துத் தரும் பட்சத்தில், உடனடியாக பாணை பழைய விலைக்கு விற்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

அத்துடன், கோதுமை மாவை பேக்கரி உற்பத்தித்தியாளர்கள் நேரடியாக இறக்குமதி செய்யும் வகையில், இறக்குமதித் தீர்வையை அரசு குறைத்துத் தந்தால் கோதுமை மாவை இறக்குமதி செய்து, பாவனையாளர்களுக்கு இதை விட குறைந்த விலையில் தரமான பாணை வழங்க முடியுமெனவும் தெரிவித்தனர்.

2016/07/14 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் இலக்கம் 1975/68 நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்திருத்த விதிமுறைக்கிணங்க கோதுமை மாவின் ஆகக்கூடிய சில்லறை விலை 87 ரூபாவாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நுகர்வோர் பாதுகாப்பு சபையின் அனுமதியின்றி கோதுமை மா இறக்குமதியாளர்கள், தமக்கு விரும்பியபடி கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளமை சட்ட விரோதமானது எனவும், சந்தையில் மாவின் சில்லறை விலையை 87 ரூபாவுக்கு மேல் வர்த்தகர்கள் அதிகரித்து விற்றால், அவர்களுக்கெதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நாளை தொடக்கம் (20) சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுக்குமென, அதிகார சபையின் முக்கியஸ்தர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பேக்கரி உற்பத்தித்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், பேக்கரி உரிமையளர்களின் கோரிக்கையை, கோதுமை மா இறக்குமதியாளர்கள் உடன் நிறைவேற்றினால் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தாமும் அதே விலைக்கு பாணை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இன்று காலை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

-ஊடகப்பிரிவு-

 

Related Post