Breaking
Fri. Apr 26th, 2024

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் கையெழுத்திடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருந்தது. இதற்கு எதிராக கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

முன்னைய நாட்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் அந்த வழக்கானது மேற்கொண்டு விசாரிக்கப்படுவது அவசியமற்றது எனக்கருதி, வழக்கை வாபஸ் பெறுவதற்கான உரிய அறிவுறுத்தல்களை பெற்றுக்கொண்டு, அதனை நிறைவுக்குக் கொண்டுவருமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பை அடுத்து, மனுதாரரான வை.எல்.எஸ்.ஹமீதின் சட்டத்தரணிகள் இன்று (15) வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இந்த வழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியான அலி சப்ரியும், கட்சித் தலைவர் மற்றும் தவிசாளர் சார்பில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும், செயலாளர் சார்பில் சட்டத்தரணி ருஷ்தி ஹபீபும் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.   

-ஊடகப்பிரிவு-

Related Post