Breaking
Fri. Apr 26th, 2024

எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல், எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் கூட நடைபெறுமா? என்ற சந்தேக சாத்தியங்கள் தென்படுவதாக கடந்த 11.10.2018 தேர்தல்கள் கமிஷன் தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்ட கருத்துக்கள், மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை மீறும் செயலாக கணிக்கப்படுகின்றது.

அங்கு வெளியிடப்பட்ட கருத்தின்படி மாகாண சபைத் தேர்தல் புதிய தொகுதி வாரி தேர்தல் முறையிலா (50:50) அல்லது பழைய விகிதாசார முறையிலா என்பது பற்றி அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பது உண்மை. ஆனால் அதற்காக மக்களுடைய அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை, மாகாண சபைகளை நிர்வகிப்பதற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையை தள்ளிப் போடவோ, ஒத்தி வைக்கவோ முடியாது. தேர்தல்கள் தாமதிக்கப்படுவது என்பது மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதற்கு சமமாகும் என தேர்தல் கமிஷன் தலைவரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்கள் நேரடியாகக் கூறினார். மக்களுடைய வாக்குரிமையையும் தேர்தலையும் பாதுகாப்பதில் தேர்தல் கமிஷன் தலைவர் என்ற வகையில் தான், நான் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளையும் அழைத்து எந்த முறையிலாவது (புதிய முறை 50:50 அல்லது  பழைய விகிதாசார முறை) மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமென பணிவுடன்  வேண்டுகின்றேன் என்று கூறினார்.

புதிய மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கும்  இழுபறிகளுக்கும் மத்தியில் தான் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் உதவியுடன் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையுடன் 50:50 என்ற கோட்பாட்டின் கீழ் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 50 வீதமான  பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான 233 தொகுதிகளை மாகாண சபைத் தொகுதி  எல்லை நிர்ணய கமிஷன் (Delimitation Commission)   நிர்ணயித்து, தொகுதிகளை அடையாளமிட்டு அமைச்சரிடம் கையளித்தது. அந்த அறிக்கையின் பிரகாரம் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும், மலையக தமிழருக்கும் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்தாக தமிழ், முஸ்லிம் மக்கள் குற்றம் சாட்டினர். இருந்த போதும் உள்ளுராட்சி அமைச்சரும் அரசின் ஒரு அங்கமான பொதுஜன ஐக்கிய முன்னணி ( சு.கட்சி) யும் தொகுதி நிர்ணய குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தனர்.  பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளும் இந்த தொகுதி நிர்ணய அறிக்கையை எதிர்த்ததால்   இறுதியில் சட்டமூலத்தை சமர்ப்பித்த உள்ளுராட்சி மாகாணசபை அமைச்சரும் கூட இந்த சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களித்து, பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய பதிவை உருவாக்கினார் எனலாம்.

இப்போது எந்த முறையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடு தோன்றியுள்ளது. எல்லா முஸ்லிம் கட்சிகளும், எல்லா தமிழ் கட்சிகளும் அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியும் பழைய விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த உடன்பட்டுள்ளன. சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும், மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினரும் JVP யும்  புதிய முறையில் தேர்தலை நடத்த கோருகின்றனர்.  எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த பின் அதனை திருத்தி, மீள எல்லைகளை நிர்ணயம் செய்ய  நீண்ட காலம் தேவைப்படும். அத்துடன் அவற்றில் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதிலும் பிரச்சினைகள் நிறைய உள்ளன. இருக்கின்ற தொகுதிகளில் சிலவற்றை இரட்டை  அங்கத்தவர் தொகுதியாக மாற்றுவதிலும் சட்டப் பிச்சினைகள் உள்ளன. இதனால் தான் தேர்தல் கமிஷன் தலைவர் எல்லா அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து ஏதோ ஓர் அமைப்பில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு முடிவுக்கு வரும்படி பணிவாகவும் வினயமாகவும் வேண்டியுள்ளார்.

ஏற்கனவே மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்து பல மாதங்களாகின்றன. இன்னும் மூன்று மாகாணங்களின்  பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகின்றன. இவற்றின் நிர்வாகங்கள் மாகாண ஆளுனரின் பொறுப்பில் விடப்படுவதால் மக்களின் ஜனநாயக உரிமை பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகிறன்றன. அரசியல் அதிகாரம் அரச அதிகாரிகளின் பொறுப்பில் விடப்படுவதால் பொதுமக்களுடைய தேவைகள், குறைநிறைகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இதனால் தான் மாகாண சபைகளின் அதிகாரத்தை மக்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைப்பதற்கு தேர்தல் நடாத்தப்படுவது அவசியம். அரசியல் கட்சிகளின் இழுபறிக்காக மக்களின் வாக்குரிமையை – அதிகாரத்தை தள்ளிப் போட முடியாது. இது விடயத்தில் சட்டத்தின் உதவியை நாடி பொதுமக்களோ, சிவில் சமூக அமைப்புக்களோ அல்லது தேர்தல் கமிஷனரோ நீதிமன்றம் போகவும் இடமுண்டு.

எது எப்படியென்ற போதிலும் புதிய முறையிலோ அல்லது பழைய விகிதாசார முறையிலோ தேர்தலை நடாத்த பாராளுமன்றத்தில் உள்ள பிரதநிதிகளில் 151 பேரின் அங்கீகாரம் தேவைப்படுகின்றது. எல்லா அரசியல் கட்சிகளும், பொதுமக்களின் வாக்குரிமையை மதித்து ஒரு தீர்மானத்துக்கு வந்து, அத்தீர்மானம் 2/3 பெரும்பான்மையினால் நிறைவேற்றப்படுமாயின்  எதிர்வரும் ஜனவரி / பெப்ரவரி மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும். இது தேர்தல் கமிஷன் தலைவரினதும் நம்பிக்கையாகும்.

நிலைமைகள் இப்படியிருக்க மாகாணசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டை இப்படி தெரிவித்துக் கொள்கின்றது. பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் புதிய முறையில் தொகுதிவாரி 50:50 முறையில் மாகாண சபைத்தேர்தல் நடாத்தப்படுவதில்; பெரிய சிக்கல் உள்ளது. ஏற்கனவே மாகாண சபைத் தொகுதிகள் நிர்ணயம் பாராளுமன்றத்தினால் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில்,  பாராளுமன்றத்தினால் நியமனம் செய்யப்பட்ட 5 பேரைக் கொண்ட குழு புதிய முறையை பரிந்துரை செய்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க அல்லது நீதிமன்றம் போய் தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. புதிய தொகுதிகளை அடையாளமிட்டு எல்லா சமூகங்களும் திருப்தியுறும் நிலையில் சட்டமூலம் தயாரிக்க நீண்ட காலமெடுக்கும்.

மேலும்  கடந்த பெப்ரவரி மாதத்தில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரி 60:40 உன்ற அடிப்படையில் நடைபெற்று உள்ளூராட்சி மன்றத் தலைவர்களைத் தெரிவதில் ஏற்பட்ட சிக்கல்களைக கண்டுகொண்டோம்.  புதிய மாகாண சபைத் தேர்தல்கள் 50:50 என்ற விகிதத்தில் நடைபெறுவதால் மாகாண சபையில் தொகுதிகளில் வெற்றிபெற்ற பெரிய கட்சி முதலமைச்சரையும் அமைச்சர் சபையையும்  அமைக்க முடியாமல் போகலாம். சிறு கட்சிகளின் கூட்டு முதலமைச்சரையும் அமைச்சர்களையும் பங்கு போட்டுக் கொள்ளும் நிலை ஏற்படலாம். பிறகு மாகாண சபை நிர்வாகம் பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.  நிர்வாகம் ஒழுங்காக நடைபெற மாட்டாது. அடிக்கடி முதலமைச்சரை மாற்றும் நிலையும் ஏற்படலாம்.

பழைய முறையில் விகிதாசார அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால்  விருப்பு வாக்குமுறை, அதிக செலவு  என்ற இரண்டைத் தவிர வேறு சிக்கல்கள் இல்லை. 1988 முதல் மக்கள் அனுபவப்பட்ட முறை இதுவாகும். மேலும் எல்லா சமூகங்களும் உடன்பாடு கண்ட முறையுமாகும். நிர்வாக சீர்கேடு குறைந்து, ஸ்திரமான ஆட்சி நடைபெறும். மேலும் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும், தொகுதிகளுக்கும், பொறுப்புக் கூறக்கூடிய அவ்வப் பிரதேச பிரதிநிதிகளை கட்சிகள் நியமிக்கலாம். விருப்பு வாக்கு  முறையில் பட்ட அனுபவங்களினால் அதன் சாதக பாதக தன்மைகளை பொதுமக்களும் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால் தகுதியான தமது பிரதேசத்துக்கு சேவை செய்யக் கூடியவர்களை தெரிவு செய்ய வாய்ப்புள்ளது.

அதிக செலவு பற்றிய முறைப்பாடுகள், முழு மாவட்டத்திலும் அலைச்சல் என்ற போதிலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு மாவட்டப் பிரதேசங்களைப் பிரித்துக் கொடுத்து செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த வகையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் பழைய விகிதாசார தேர்தல் முறையிலேயே நடைபெற வேண்டும் என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கின்றது. எல்லா தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும்  ஐ.தே.கட்சியும் உட்பட உடனடியாக மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமெனக் கோறுகின்றனர். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் ஒரு திருத்தத்தினை 2/3 பங்கு வாக்குகளினால் நிறைவேற்றுவதன் மூலம், பழைய விகிதாசார தேர்தலை நடாத்துதுவதற்கு தடைகள் ஏதும் இருக்காது. இதனை 02 மாதங்களுக்குள் நிறைவேற்றிவிட சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.

எஸ்.சுபைர்தீன்

செயலாளர் நாயகம்,                                                       

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,   

15.10.2018.

Related Post