Breaking
Fri. Apr 26th, 2024

எஸ்.அஸ்ரப்கான்

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு தம் எஜமானர்களின் ஊது குழலாக செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தை அபகீர்த்திக்குள்ளாக்குவதையும், முஸ்லிம் சமூதாயம் தொடர்பாக இனவாதிகளின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கின்ற அறிக்கைகளை வெளியிடுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஹம்மட் முஸம்மிலுடைய தலைவர் விமல் வீரவன்சவின் முஸ்லிம் விரோத கருத்துக்களை முஸம்மில் என்கிற ஊது குழலின் ஊடாக தெரிவித்து வருகின்ற வரிசையில் ஒரு கட்டமாக கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கையை ஒரு பாரதுாரமான தேசவிரோத முன்னெடுப்பு போன்றும் அக்கோரிக்கை முன்வைத்தமைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை ஐ.எஸ்.ஐ.எஸ். இன் முகவர் என்றும் குறிப்பிட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ஒரு புறம் பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு மத்தியில் தீவிரவாதக் குழுக்கள் இருப்பதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ், தலிபான் போன்றவர்கள் இலங்கையில் இயங்குவதாகவும் ஒரு பாரிய பொய் பிரச்சாரத்தை கடந்த காலங்களில் முன்னெடுத்து பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் முஸ்லிம் விரோத மனப்பான்மையை உருவாக்க முயற்சி செய்தது. இப்பொழுது ஒரு முஸ்லிம் கட்சித் தலைவரை ஐ.எஸ்.ஐ.எஸ். முகவர் என்று ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி கூறுகின்றபொழுது அப்பாவிப் பெரும்பான்மை மக்கள் சிலவேளை அதனால் பிழையாக வழிநடாத்தப்பட வாய்ப்புண்டு.

அவ்வாறாயின் அது முஸ்லிம் சமூதாயத்தின் மீது ஒரு பாரிய எதிர்மறைத் தாக்கத்தைச் செலுத்தும். எனவே முஸம்மில் தனது அரசியல் பிழைப்பிற்காக முஸ்லிம் சமூகத்தையே விற்க முற்பட்டு வருவதை இனிமேலும் தொடரக் கூடாது. அவர் யாருக்கு வேண்டுமானாலும் காவடி ஆடிவிட்டுப் போகட்டும். ஆனால் முஸ்லிம்கள் தொடர்பாக போசுகின்ற யோக்கியதை அவருக்கு இல்லை.

கல்முனை கரையோர மாவட்டம் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது. இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களே இல்லையா ? அல்லது அவ்வாறு உருவாக்கக் கூடாது என்று ஏதாவது விதிகள் இருக்கின்றனவா ? யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களை 99 வீதமாகக் கொண்ட கிளிநொச்சி மாவட்டம் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்படவில்லையா ? அதனால் இந்த நாடு இரண்டாக பிளவுபட்டு இருக்கின்றதா ?
அம்பாரை மாவட்டம் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாகும்.

.

இன ரீதியாக அல்லது மொழி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்படக் கூடாது என்று வாதிடுகின்றவர்கள் ஏன் அம்பாரை மாவட்டத்திற்கு தமிழ் பேசும் அரசாங்க அதிபர் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பவில்லை. அதேபோன்று திருகோணமலை மாவட்டம் மாவட்டம் சுமார் 75 வீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு ஏன் தமிழ் பேசும் ஒருவரை நியமிக்க முடியாது.

அமெரிக்காவில் ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக வரலாம். அங்கு ஜனநாயகம் இருக்கின்றது. இந்தியாவில் ஒரு முஸ்லிம் ஜனாதிபதியாக வரலாம், சீக்கியர் பிரதமராக வரலாம். அங்கும் ஜனநாயகம் இருக்கின்றது. இலங்கையிலும் ஜனநாயகம் இருக்கின்றது. ஆனால் ஒரு தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வர முடியாது என்பது மட்டுமல்ல அவ்வாறு வருவதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வாறு யாராவது கனவு கண்டால் அதற்கும் “இனவாதக் கனவு” என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள். ஆனால் எந்தவொரு தமிழரோ முஸ்லிமோ அவ்வாறு ஒருபோதும் கனவு காண்பதில்லை.

எனவே இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கின்ற பொழுதிலும் கூட ஒரு மாவட்டத்தில் சிறிய விகிதாசாரத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் என்ற எழுதாத விதி காலாகாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அவ்வாறான அரசாங்க அதிபருடனான மொழிப் பிரச்சினை மற்றும் அவர்களது இனவாதப் போக்கு போன்றவற்றை பல்லாண்டு காலம் சகித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் தங்கள் பிரதேசத்திற்கு ஒரு தனியான நிருவாக மாவட்டம் கோருவது எந்த வகையில் பிழையாகும் என்பதற்கு முஸம்மில் போன்ற ஊது குழல்களின் இனவாத தலைமைத்துவங்கள் தரப்போகின்ற பதில் என்ன ?

அதே நேரம் நியாயங்கள் எவ்வாறாக இருந்தபோதிலும் இந்த நாடு இனவாதத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றது என்பது யதார்த்தமாகும். அதன் வெளிப்பாடுதான் முஸம்மில் போன்ற முஸ்லிம் பேர் தாங்கிகள் தன் எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்காக முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாதம் பேசுவதாகும். எனவே நியாயங்கள் எவ்வளவுதான் இருந்தபோதிலும் சில விடயங்கள் சாணக்கியமாக அணுகப்பட வேண்டும். அவ்வாறான ஒரு விடயம்தான் கரையோர மாவட்டமாகும். எனவே கடந்த அரசாங்கத்திடம் முன்வைத்து கன கச்சிதமாக காரியத்தை முடிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக பத்திரிகைகளினுாடாக இக் கோரிக்கையை முன்வைத்து தம்புள்ள பள்ளிவாயல் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் பெற்றதுபோல் இதிலும் ஆதாயம் பெற முனைந்ததுதான் பேரினவாத சக்திகளுக்கு இதனை அரசியல் வியாபாரப் பொருளாக்கி ஆதாயம் தேடுவதற்கு வழியமைத்து கொடுத்ததாகும்.

எனவே அரசியல்வாதிகள் வெறுமனே வாக்குகளுக்காக எவ்வாறும் அரசியல் செய்யலாம் என்கின்ற பாதையை மாற்றி, நாம் செய்கின்ற அரசியல் கூட மறுமைக்கான அரசியலாக செய்ய முயற்சிக்க வேண்டும். அதே நேரம் முஸம்மில் போன்ற இனவாதிகள் பேச ஆரம்பிக்கின்ற பொழுது தான் முஸ்லிம் பேர் கொண்டிருந்தாலும் முஸ்லிம்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை பெரும்பான்மைக்கு மத்தியில் பிரகடனப்படுத்திவிட்டு இனவாதிகளுடன் தன்னை அடையாளம் காட்ட வேண்டும். அல்லது உடனடியாக தௌபாச் செய்து முஸ்லிம் சமூதாயத்தின் அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்றும் வேண்டுகின்றோம் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *