Breaking
Fri. Apr 26th, 2024

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக பெய்துவந்த மழையினால் வடக்கில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இம்மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் சென்றடைவதில் தாமதம் காணப்படுவதாகவும், இதனை கட்டுப்பாடும், தட்டுப்பாடுகளுமின்றி விநியோகிக்க வேண்டியமை தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, சதொச மூலம் இதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இம்மக்களுக்கு போதுமான அளவு பொருட்களை தத்தமது மாவட்டத்தில் களஞ்சியப்படுத்தி, அவற்றை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாதிப்புக்குள்ளான மாவட்ட அரச அதிபர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேண்டியுள்ளார்.

05 பார ஊர்திகளில் இந்த அத்தியாவசியப் பொருட்கள் வெலிசற லங்கா சதொச களஞ்சியசாலையிலிருந்து இன்று (26) மாலை அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதில் அரிசி, கிழங்கு, பருப்பு, உப்பு, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வடக்கில் பெய்த மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா யாழ் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அனர்த்த முகாமைத்துவ மற்றும் அரச முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முக்கிய கலந்துரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post