Breaking
Fri. Apr 26th, 2024

துருக்கியில் அதிபர் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று புரட்சி நடத்தினர்.

அப்போது அதிபர் எர்டோகன் ஏஜியன் சுற்றுலா தளத்தில் தங்கியிருந்தார். அவரது வேண்டுகோளின்படி களம் இறங்கிய பொதுமக்கள் ராணுவ புரட்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான் புல் நகரங்களில் சுற்றிய பீரங்கி வாகனங்களை சிறை பிடித்தனர்.

இதனால் பொதுமக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடந்தது. அதில் புரட்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் 100 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் எர்டோகனிக் ஆதரவாளர்கள் 165 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 265 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் 40 போலீசாரும், 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் அடங்குவர். இவர்கள் தவிர இருதரப்பிலும் 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக 2,839 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ராணுவத்தில் இருந்து 29 கர்னல்கள், 5 தளபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

துருக்கி நீதிதுறையை சேர்ந்த பல்வேறு நீதிபதிகளும் ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். எனவே இதுகுறித்து விவாதிக்க நீதிதுறையின் உயர்நிலைக் கூட்டம் நடந்தது. அதில் ராணுவ புரட்சிக்கு உதவிய 2,745 நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே ராணுவ புரட்சியில் ஈடுபட்ட வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கி தூக்கிலிட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் ஏ.கே. கட்சி தலைவர் மெக்மெட் முசேனோகுலு டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், புரட்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை தூக்கிலிட சட்டம் இயற்ற முன்வர வேண்டும். மேலும் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கும் இத்தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று நடந்த ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 3-வது தளபதி ஜெனரல் எர்டெல் ஓஷ்டர்க் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ புரட்சி பொது மக்களால் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து 8 மூத்த தளபதிகள் ஹெலிகாப்டர் மூலம் கிரீஸ் நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களது ஹெலிகாப்டர் கிரீசில் அலெக்சாண்டோ போலிங் நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை கிரீஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அங்கு தஞ்சம் கேட்டு கிரீஸ் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்களை தங்களிடம் ஒப்படைக்க துருக்கி அரசு கோரியுள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *