Breaking
Fri. Apr 26th, 2024

இந்த வருடம் டிசம்பர் 31இற்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் தனியாருக்கு மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) வழங்குவதில்லையெனவும் மண் வளம் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அந்தப் பிரிவிலுள்ள பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அமைக்கப்படும் ஒன்றியத்தின் வழியாக அவசியத் தேவையானவர்களுக்கு மாத்திரமே பெர்மிட்களை வழங்குவதெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் கூட்டாக விடுத்த அறிவிப்பை மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் மண் அகழ்வினால் அந்தப்பிரதேசம் பாதிக்கப்படாத வகையில் பல்வேறு காத்திரமான முடிவுகளையும் மாவட்ட அபிவிருத்திக் குழு ஏற்றுக்கொண்டது.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் நேற்று (21) காலை மன்னார் கச்சேரியில் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் எம்பிக்களான காதர் மஸ்தான், சார்ல்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

முசலிப் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மண் அகழ்வுக்கு தடைவிதித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டிய முசலிப்பிரதேச செயலாளர் அந்தப் பிரதேசத்தில் வீடுகள் அமைப்பதற்காகவும் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் மண்ணின் கேள்வி எழுந்துள்ளதாகவும் இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரினார்.

பிரதேச செயலாளர்களினால் 100 கியூப் அளவிலான மண்ணை அகழ்ந்தெடுப்பதற்கான சட்டபூர்வமான அனுமதியை மட்டுமே வழங்க முடியுமெனவும் அதற்கு மேலதிகமாக தனியாரோ, கம்பனிகளோ மண்ணை அகழ்ந்தெடுப்பதற்கான கோரிக்கையை விடுக்கும் பட்சத்தில் இதற்கான மாற்றுவழியை சபை கவனத்திற் கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
வீடுகள் அமைப்பதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள கம்பனிகளுக்கு டிசம்பர் 31 வரை பழைய ஜி எஸ் எம் பி அனுமதிப்பத்திர நடைமுறைகளை தொடர்வதெனவும் அதன்பின்னர் மன்னார் மாவட்டத்தின் மண் அகழ்வு குறித்து முறையான கட்டமைப்பின் படி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதெனவும் அங்கு முடிவு செய்யப்பட்டது.

அதாவது, கிராம சேவகர் பிரிவில் இயங்கும் கிராம அபிவிருத்தி சங்கம் கமநல சேவைகள் அமைப்பு பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் இன்னோரன்ன சமூக நல அமைப்புக்களை உள்ளடக்கிய ஒன்றியத்தின் மூலம் பெர்மிட்களை வழங்குவதனால் மண் அகழ்வை பாரிய அளவில் கட்டுப்படுத்த முடியுமென அங்கு முடிவு செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்தப் பிரதேசத்திற்கு வந்து கண்டபடி மண் அகழ்வில் ஈடுபட்டதனாலேயே மாவட்ட அபிவிருத்திகுழு இந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *