Breaking
Sat. Apr 27th, 2024

ஊடகப்பிரிவு

 

இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை அரசாங்கம் உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

 

மன்னார் மாவட்ட செயலக நிருவாக கட்டிடத்தை இன்று காலை (19.05.2017) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

பௌத்த மத குருமார்களில் ஒரு சிலர் ஜனாதிபதி போலவும், பிரதமர் போலவும், பாதுகாப்பு அமைச்சுப் போலவும் செயற்பட்டு வருகினறனர். அதுமட்டுமன்றி அவர்கள் சட்டத்தை மதிப்பதாகவுமில்லை. இவர்களின் செயற்பாடுகளை பார்க்கும்போது வேதனையாக இருக்கின்றது. எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது இந்த நாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

 

இனவாதத்தை வளர்த்து அதன் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டுமென்ற ஒரு சதியின் பின்னணியிலேயே இவ்வாறான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியினதும், பிரதமரினதும் நல்ல தன்மையினை இவர்கள் தமது நடவடிக்கைக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

 

30ஆண்டுகால யுத்தத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக  வாழும் இனங்களுக்கிடையிலே மீண்டும் குரோதத்தை தோற்றுவித்து, இந்த நாட்டில் இரத்த ஆற்றினை மீண்டும்  ஓடச்செய்து நாட்டை குட்டிச்சுவராக்க ஒரு சிறு கூட்டம் நினைக்கின்றது. வெளிநாடுகளில் கையேந்தும் நாடாக இலங்கையை ஆக்கவேண்டும் என்பதுவும் இவர்களின் இலக்கு. இவர்களின் செயற்பாடு நாளுக்குநாள் மொசமாக இருக்கினறது. இதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் அனுமதிக்கக்கூடாது. இன்று காலை கூட ஜனாதிபதியை தொடர்பு கொண்டு இதனை தெளிவாக தெரிவித்தேன்.

 

நமது நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும்  கட்டியெழுப்பப்படவேண்டும். என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் பிரதமரினது அர்ப்பணிப்புகளை நான் நினைத்துப்பார்க்கின்றேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட கிடைத்த சந்தர்ப்பத்தை நாட்டு நலனுக்காக அவர் விட்டுக்கொடுத்து நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்பதில் மேற்கொண்ட அவருடைய தியாகம் போற்றப்படவேண்டியது.

 

ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல காலங்களில்; மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை இப்போது நிறைவேற்றி வருகின்றார். அந்த வகையில் 300மில்லின் ரூபா செலவில் பொது நிருவாக அமைச்சினூடாக இந்த பிரமாண்டமான கட்டிடத்தை நமக்கு வழங்கியுள்ளார்.

 

மன்னார் மாவட்டத்தை சுற்றுலாத்துறையிலும் ஏனைய துறைகளையும் கட்டியெழுப்புவதற்கு பிரதமர் உதவுவார். ஜீ.எஸ்;.பிளஸ் நமது நாட்டில் கிடைப்பதற்கு பிரதமரின் பங்களிப்பு மகத்தானது. வர்த்தகத் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதில் அவர் அரும்பாடுபடுகின்றார்.

யுத்தகாலத்தில் உயிரையும் துச்சமென கருதி பணியாற்றிய அதிகாரிகளை நான் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அரசியல்வாதிகளை விட அதிகாரிகள்; அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கின்றார்கள் அத்துடன் மன்னார் கச்சேரியில் மூவினங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சிறப்பாக பணிபுரிவது எமக்கு பெருமை தருகிறது. தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதமின்றி  மூன்று சமூகங்களும் மன்னாரில் வாழும் சூழல் உருவாகியுள்ளது எனினும், அரசியல் இருப்புக்காக இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு செயற்படுபவர்கள் மக்களின் நலன் கருதி தமது நடவடிக்கைகளை கைவிட  வேண்டும்.

 

சிறுபான்மை  மக்கள் நிம்மதி இழந்து தவிக்கினறனர். காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள் சுமார் 89நாட்கள் தொடர்ச்சியாக வீதிகளில் போராட்டம் நடத்துகின்றனர். இன்று காலை அமைச்சர் சாகலவும் நானும் அந்த இடத்திற்கு சென்றோம். அத்துடன் பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டம் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவற்றுக்கும் பிரதமர் ஜனாதிபதியுடன் இணைந்து தீர்வு காண்பார் என நம்புகின்றேன்.

அத்துடன் பிரதமரின் 10லட்சம் பேருக்கான வேலை வழங்கும் திட்டத்தில் அமைச்சர்களாகிய எங்களது பங்களிப்பு வெகுவாக இருக்கும் என உறுதி கூறுகின்றேன்.

 

மன்னார்; மாவட்டத்திலே சிலாபத்துறை, முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்விடங்கள் கடற்படையினராலும், இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இவற்றை அந்த மக்களிடம் கையளிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.

 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான சாகல ரட்ணாயக்க, சுவாமிநாதன், வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ், காதர் மஸ்தான், பொலிஸ்மா அதிபர், மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் அரச உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *