Breaking
Fri. Apr 26th, 2024

23வருடங்களுக்கு முன்னர் விதை உருளைக்கிழங்கை கடனாகப் பெற்று, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கும்  உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் 73பேருக்கு  நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு வியாபாரிகளுக்கு உறுதியளித்தார்.

ஊவா மாகாணத்தைச் சேர்ந்த  உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து உருளைக்கிழங்கு உற்பத்தியால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டங்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து விபரித்தனர்.

கெபட்டிபொல  உடபலாத்த பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில்; அங்கத்தவர்களான தாங்கள், 1994ம் ஆண்டு உருளைக்கிழங்கு செய்கைக்காக, இச்சங்கத்தில் கடனாக  விதை உருளைக்கிழங்கை பெற்றுச் செய்கை பண்ணியபோது, அந்தச் செய்கை தமக்கு வெற்றியளிக்கவில்லை எனவும், இதனாலேயே தாங்கள் கடனை செலுத்துவதில்லையென தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டனர். தாங்கள் கடனாகப் பெற்றுக்கொண்ட விதை உருளைக்கிழங்கு வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருந்ததனால் உருளைக்கிழங்கு செய்கை  வெற்றியளிக்கவில்லை எனவும், அவர்கள் தெரிவித்தனர். அதனை நாட்டிய பின்னரேயே  பழுதடைந்த விடயம் தமக்கு தெரியவந்ததெனவும் குறிப்பிட்டனர்.

இந்தக் கூட்டுறவுச்சங்கத்தில் 344 உற்பத்தியாளர்கள் கடன் பெற்றனர். சுமார் 60ஆயிரத்திற்கு குறைவாக கடன் பெற்றவர்களின் கடன்கள் இரத்துச் செய்யப்பட்ட போதும், அதற்கு மேற்பட்ட கடன்பட்ட 74உற்பத்தியாளர்கள் இன்னும்; கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர்.  தாங்கள் 10மில்லியனை கடனை பெற்றபோதும் தற்போது வட்டியுடன் சேர்த்து 20.7மில்லியன் கடனை அறவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தங்களுக்கு உருளைகிழங்கை கடனாகத் தந்த கூட்டுறவுச் சமாசம், இந்தவிடயங்கள் அனைத்தும் நிர்வாகிகளுக்கு தெரிந்திருந்தும், பொலிஸில் முறைப்பாடு செய்ததனால் கடனைச் செலுத்தமுடியாத நிலையில் இருக்கும் உற்பத்தியாளராகிய நாங்கள் நாளாந்தம் பொலிஸாரினால் கைதுசெய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதுமான நிலைக்கு ஆளாகியுள்ளோம்.  கூட்டுறவுத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருமாறு வேண்டுகோள்விடுக்கின்றோம் என்றும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இந்த உற்பத்தியாளர்களின் கஷ்டமான நிலையை செவிமடுத்த அமைச்சர் ரிஷாட் கூட்டுறவுத் திணைக்கள அதிகாரிகளிடம், இது தொடர்பான மேலதிக விடயங்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார். அதாவது, ஊவா மாகாண கூட்டுறவு அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, விபரங்களை பெற்றுக்கொண்டு தமக்கு இது தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சராசரி 25ஆயிரம் மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுவதாகவும், 2014,2015ம் ஆண்டளவில் 70ஆயிரத்து 377 மெற்றிக்தொன் உருளைக் கிழங்கு உள்நாட்டில் உற்பத்தி செய்ய்ப்ட்டது எனவும், 2015, 2016ம் ஆண்டளவில் உற்பத்தி 40சதவீதத்தால் அதிகரிப்புக்குள்ளாகி அது 80ஆயிரத்து 488மெற்றிக்தொன்னுக்கு உயர்வடைந்துள்ளதாக  இந்தச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 1கிலோகிராம் இறக்குமதி விதை உருளைக்கிழங்கு  ரூபா 6ஆயிரம் தொடக்கம் 7ஆயிரம் வரை எனவும், உள்நாட்டு  விதை உருளைக்கிழங்கு ரூபா 14ஆயிரம் தொடக்கம் 15ஆயிரம் வரையில் இருப்பதாகவும் சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டது. சில காலங்கள் இறக்குமதி விதை உருளைக்கிழங்கு நிறுத்தப்பட்டிருந்த போதும், உள்நாட்டில் விதை உருளைக்கிழங்கின் விலை அதிகரித்திருப்பதால் மீண்டும் விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுவதாக அங்கு குறிப்பிடப்பட்டது. இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் சிந்தக லொக்குஹெட்டிகே, கூட்டுறவு ஆணையாளர் நசீர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

சுஐப். எம். காசிம்

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *