Breaking
Fri. Apr 26th, 2024

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் கீழ் அதிகார சபையின் தலைவர் ஹஸித்த திலகரட்ன அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ம் ஆண்டு 33சதவிகித சுற்றிவளைப்பு இடம்பெற்றதாகவும், 2016ம் ஆண்டு முதல் காலாண்டு இரண்டுடன் ஒப்பிடுகையில்  2017ம் ஆண்டு முதல் காலாண்டு இரண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 15.9சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன் 46.7மில்லியன் தண்டப்பணமாக அரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வுப் பிரிவினர், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்டரீதியற்ற குடிநீர் அடைக்கப்படும் தொழிற்சாலை சுற்றிவளைக்கப்பட்டு மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.
கம்பஹாவில் விற்பனைக்குதவாத சுமார் 1.5கோடி ரூபா பெறுமதியுள்ள 50ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூண்டு கைப்பற்றப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு குறிப்பிட்ட தொகை வெள்ளைப்பூண்டு அழிக்கப்பட்டதுடன் குற்றவாளியாக காணப்பட்ட வர்த்தகருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

கொழும்பில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலாவாதியான 17500 கிலோகிராம் வெள்ளைப்பச்சரிசி, பொதியிடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டு குறித்த வர்த்தகருக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது

கந்தகம் கலக்கப்பட்ட 2.5மில்லியன் பெறுமதி வாய்ந்த 4525 கிலோகிராம் கொத்தமல்லி கைப்பற்றப்பட்டு, அதற்கான மாதிரிகள் பரீசிலனைக்காக கைத்தொழில் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதைத் தவிர, பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்படாமை, நுகர்வோரை பிழையாக வழிநடத்தியமை, நுகர்வோருக்குப் பற்றுச்சீட்டு வழங்காமை, ஆகியவை தொடர்பிலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெரும்பாலாக அரிசி, குடிநீர், தேங்காயெண்ணெய், பால், சீரகம், மென்குளிர்பானங்கள், நெத்தலி, குரக்கன்மா, கொத்தமல்லி, டின்மீன், ஆகிய பொருட்கள் இராசாயனப் பகுப்பாய்வு திணைக்களம,;  கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட இரசாயன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு நுகர்வோரின் நலன்களைப் பேணும் வகையில் தெளிவுபடுத்தப்பட்டது என்று அந்த சபை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *