Breaking
Sat. Apr 27th, 2024

எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் துறை மையங்கள் உல்லாசப் பயணிகளை மையப்படுத்திய வேலைத் திட்டங்களாக கிராமிய பொருளாதார அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

தேசிய அருங்கலை பேரவையின் பேத்தாளை கருங்காலிச்சோலை மட்பாண்ட கைப்பணி வியாபார நிலைய திறப்பு விழாவும், உபகரணம் வழங்கும் நிகழ்வும் உற்பத்தி நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் தேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

உலகத்திலே மிகவும் பிரசித்த பெற்ற பாசிக்குடா கடற்கரையை அண்டிய சுற்றுலாப் பிரதேசமாக இப்பிரதேசம் திகழ்வதால் இங்கு வரும் உல்லாச பயணிகளை கவரும் வகையில் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தி அதனை சந்தையில் நல்ல விலைகளைப் பெற்று உங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அரசாங்கம் இங்கு கொண்டு வந்துள்ளது.

எனவே இதிலே வேலை செய்பவர்கள் இது எம்முடைய சொத்து இதனை பாதுகாத்து சிறந்த முறையில் நல்ல பயனை அடைய வேண்டும் என்று கருதினால் மாத்திரம் தான் இதனை வெற்றிகரமாக செய்ய முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாத மேம்பாட்டுக்கு கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாறான நிகழ்வுகள் தூர்ந்து போய் காணப்படுகின்றது. இதனை சரியான முறையில் வழி நடாத்திச் செல்ல முடியாத காரணத்தினால் தூர்ந்து போய் காணப்படுகின்றது. சிங்களப் பிரதேசத்தில் இவ்வாறான நிலைமை காணப்படுமாக இருந்தால் என்ன விலை கொடுத்தாவது, தனிப்பட்ட உதவிகளைப் பெற்றாவது இதனை வாழ வைத்திருப்பார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் துறை மையங்கள் உல்லாசப் பயணிகளை மையப்படுத்தி செய்ய வேண்டிய வேலைத் திட்டங்களை கிராமிய பொருளாதார அமைச்சின் மூலம் எதிர்காலத்தில் செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாப் பிரதேசத்தில் பேத்தாழைக் கிராமத்தில் மட்பாண்ட கைப்பணி நிலையத்தை ஆரம்பித்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இத்திட்டத்தை இங்கு கொண்டு வருவதற்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெரும்பான்மை சமூகங்கள் வாழ்ந்த இடங்களில் மாத்திரம் தான் மட்பாண்ட கைப்பணி நிலையம் இயங்கி வந்தது. ஆனால் தற்போது எல்லா பிரதேசங்களிலும் வியாபித்து பெரும்பான்மை பிரதேசத்திற்கு சொந்தமானதாக இல்லாமல் எமது பிரதேசத்திலும் எட்டிப்பார்க்க துவங்கி இருக்கின்றது என்று சொன்னால் அமைச்சர் றிசாட் பதியூதின் எடுத்துக் கொண்ட முயற்சியாகும்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வேலைத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்;டத்தில் களி வளங்களைக் கொண்ட போரதீவு, வெல்லாவெளி பிரதேசங்களிலே இவ்வாறான வேலைத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். அங்கும் இவ்வாறான நிலையங்கள் ஆரம்பித்து அவர்களது வாழ்வாதாரத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றார்.

தேசிய அருங்கலை பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உதவிப் பணிப்பாளர் பொன்.குவேதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய அருங்கலை பேரவையின் தவிசாளர் கேசானி போகலாகம, பணிப்பாளர் சந்திரமல லயனனே, மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, தேசிய அருங்கலை பேரவையின் ஊழியர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் இருபத்தி நான்கு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட வியாபார நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், களி மணி பிசையும் இயந்திரம் மற்றும் பதினைந்து பேருக்கு சக்கப்போர் உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது.

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *