இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்குஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் கண்டனம்

இன்று சர்வதேச முஸ்லிம் சமூகம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறை மற்றும் மனித உணர்வுகளுக்கு அப்பாலான தாக்குதல் சம்பவங்களை தாம் வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன்,இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச வல்லரசு நாடுகள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன புனித பூமியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலையில்,அப்பாவி மக்களையும்,குழந்தைகளையும் இலக்கு வைத்து மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அப்பட்டமான சர்வதேச மனித உரிமை மீறல்களாகும்.இதனை தட்டிக் கேட்பதற்கு ஜெனீவா மனித உரிமை ஆணையகம் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன வென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சற்று முன்னர் வரை காஸா பள்ளத்தாக்கு மீதும்,பலஸ்தீன குடிமக்கள் வசிக்கும் பிரதேசங்கள் மீதும் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதல்களினால் 125க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தாங்கள் வாழ்ந்த பூமியினை அபகரித்துக் கொண்டும்,அங்குள்ள முஸ்லிம்களை கொத்தடிமைகளாக நடாத்தும் இஸ்ரேலின் மோசமான நிலையினை முடிவுக்கு கொண்டு வந்து பலஸ்தீன மக்கள் நிம்மதியாக வாழும் நிலையினை தோற்றுவிக்க அரபுலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை வெற்றியளிக்க இலங்கை முஸ்லிம்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுள்ளார்.
இஸ்லாமியர்கள் ஆகிய நாம் ஆயுத கலாசாரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என்பதினாலும்,துஆ பிரார்த்தனை மூலமே எதிரிகளின் சதிகளை அல்லாஹ்வின் உதவியால்ம முறியடிக்க முடியும் என்பதால்,அதில் ஈடுபடுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பலஸ்தீனத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் தாக்குதலில் ஷஹீதான சுஹதாக்களுக்காக பிரார்த்திப்பதாகவும்,சகலரையும் பிரார்த்திக்குமாறும் கேட்டுள்ளார்.
அதே வேளை இஸ்ரேலின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்,இந்த பணியினை சர்வதேச பலம் பொருந்திய நாடுகள் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.