ஈராக்கில் தாம் கைப்பற்றிய இராணுவ வீரர்களை ISIS குவியலாக நிறுத்தி சுட்டுக் கொலை செய்து வரும் நிலையில் இப்படுகொலைக்கு நியாயம் வேண்டி ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள அந்நாட்டுப் பராளுமன்றத்தை குறித்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும் இதன் போது தமது அன்புக்குரியவர்களின் முடிவு என்ன ஆனது என்பது குறித்துத் தெரியப் படுத்துமாறு குறித்த உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
கிறீன் ஷோன் எனும் சர்வதேச பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் ஈராக் பாராளுமன்றத்தை இராணுவ வீரர்களின் சுமார் 100 குடும்ப உறவினர்கள் ஆக்கிரமிக்க முயன்ற போது பாதுகாப்புப் படையினருக்கும் அவர்களுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தமக்கு உரிய பதில் கிடைக்காமல் எமது முற்றுகையைக் கை விடப் போவதில்லை எனவும் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். முக்கியமாக சமீபத்தில் டிக்ரிட் நகருக்கு அண்மையில் இராணுவ வீரர்கள் பலர் படுகொலை செய்யப் பட்டது சம்பவம் இவர்களின் ஆத்திரத்தை அதிகப் படுத்தியிருந்தது.
இதேவேளை சமீபத்தில் ஸ்பெயிச்செர் இராணுவப் பாசறையில் இஸ்லாமிய தேசப் போராளிகளான ISIS சுமார் 1700 இராணுவத்தினரை சுட்டுக் கொன்றதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஈராக்கில் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தின் படி சுமார் 1000 குடும்பங்கள் தமது பிள்ளைகளான இராணுவ வீரர்கள் ஸ்பெயிச்செர் பாசறையில் வைத்துக் காணாமற் போனதாகப் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.