Breaking
Sat. Jul 27th, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இவ்வாறு அவர் பிரதித் தலைவராக நியமிக்கப்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையாக பிரதித் தலைவர் பதவியைக் கைப்பற்றிய சந்தர்ப்பமாக அமையும். அடுத்த செயற்குழுக் கூட்டத் தின்போது கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், சஜீத்தின் இந்த நியமனத்துக்கு மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்கா, விஜயதாஸ ராஜபக்­ ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

முன்னரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இவ்வாறான மாற்றம் நடந்தது. இந்த மாற்றத்தை அடுத்தே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
1977களில் சஜீத் பிரேமதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸவை அப்போது கட்சியின் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன பிரதித் தலைவராக நியமித்தார். ரணசிங்க பிரேமதாஸவின் இந்த நியமனத்தை அப்போது கட்சியில் செல்வாக்கு படைத்தவர்களாக இருந்த ஈ.எல்.சேனாநாயக்கா, ஈ.எல்.பி.ஹுருல்ல, மொன்டகியூ ஜெயவிக்ரம ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்த எதிர்ப்பைக் கண்டுகொள்ளாத ஜே.ஆர்., ரணசிங்க பிரேமதாஸவை பிரதித் தலைவராக்கினார். அவரை இந்த முடிவை எடுக்கத் தூண்டியவர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையான எஸ்மன்ட் விக்கிரமசிங்கவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜே.ஆர். – பிரேமதாஸவின் இணைவின் பின்னரே 1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரும் வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைத்தது.

இதேபோன்று ரணில் – சஜீத்தின் இணைவும் தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைப் பெற வழிசமைக்கும் என ஐ.தே.கவினர் கருதுகின்றனர் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இதேவேளை, ஐ.தே.கவின் பிரதித் தலைவராக சஜீத் நியமிக்கப்படும் பட்சத்தில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜீத் பிரேமதாஸ தனது ஆதரவை வழங்குவார் என ரணில் நம்புகின்றார் எனவும் கூறப்பட்டது.

Related Post