(சுவனப்பிரியன்)
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் மலஸ் சிறைச் சாலையை இங்குள்ள பலரும் அறிவர். அந்த சிறைச் சாலையில் சவுதி இளைஞர் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் செய்த குற்றம் என்ன?
‘எனது மனைவியின் தோழி அவரது கணவனால் விவாகரத்து செய்யப்பட்டு குழந்தைகளோடு வறுமையில் உழன்று வந்தார். நானும் எனது மனைவியும் அந்த விதவையின் மேல் இரக்கப்பட்டு வங்கியிலிருந்து தொழில் தொடங்க 50000 ரியால் லோன் எடுத்து கொடுத்தோம். இந்த லோனுக்காக நான் ஜாமீன் போட்டுள்ளேன். ஆனால் அந்த பெண்ணோ வெறும் 10000 ரியால் மட்டுமே திருப்பி செலுத்தி விட்டு மீதி பணத்தை தராமல் காலம் கடத்தினார். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்ததால் வங்கி அதிகாரிகள் நீதி மன்றத்தில் புகார் கொடுத்தனர் இதன் விளைவாக இன்று நான் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளேன்.’
‘இந்த சிறை வாழ்வுக்காக நான் வருத்தப்படவில்லை. அந்த விதவை சிறை தண்டனையை அனுபவித்தால் அவரது குழந்தையும் பாதிக்கப்படும். பெண்ணாக அவருக்கு இதனை எதிர் கொள்வது மிகுந்த சவாலான ஒன்று. எனவே அவருக்கு பதில் நான் தண்டனையை அனுபவிப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை. எனது குடும்பம் இறைவனின் பாதுகாப்பில் நலமுடனேயே இருக்கும். என்னைப் போல் மற்றும் சிலரும் இதே சிறையில் வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்தாததால் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.’ என்கிறார் அந்த சவுதி இளைஞர்.
தனது குழந்தை தனது மனைவி தனது பெற்றோரையே பலர் இன்று நடுத்தெருவில் அலைய விட்டு விடுவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். ஒரு தாய் தனது குழந்தையோடு சிரமப்படக் கூடாது என்று எண்ணி தன்னை வருத்திக் கொள்ளும் இந்த மனிதர் என் பார்வையில் உயர்ந்து நிற்கிறார். நம் நாட்டைப்போல இங்கும் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க பல குறுக்கு வழிகள் உள்ளன. இருந்தும் தன்னால் ஏற்பட்ட இந்த இழப்புக்காக சிறை தண்டனையை விரும்பி ஏற்றுள்ளார். இறைவன் இவரைப் பொன்ற பரந்த உள்ளத்தை நம் அனைவருக்கும் தந்து சிரமப்படுபவர்களுக்கு உதவும் எண்ணத்தை ஏற்படுத்துவானாக!
தகவல் உதவி
சவுதி கெஜட்
23-08-2014