Breaking
Sat. Jul 27th, 2024

‘சுனாமி பேபி’ என்று பத்து வருடங்களுக்கு முன்னர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அபிலாஷ் மட்டக்களப்பு செட்டிப் பாளையத்தில் உள்ள பாட சாலையில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளான்.

கடந்த 2004 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப் பேரலையில் சிக்கி அபூர்வமான முறையில் உயிர்தப்பிய அபிலாஷ் அக்காலத்தில் உலகத்தையே தனது பக்கம் ஈர்த்தவர். அன்று கைக்குழந் தையாக இருந்த அபிலாஷ் தற்போது பத்து வயதுடைய சிறுவனாக நேற்று புலமைப்பரிசில் பரீட்சை எழுதினான். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நேற்று நாடுபூராகவும் நடைபெற்று முடிந்துள்ளது.

இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஏனெனில் கடந்த 2004 ஆம் வருடம் உலகையும் இலங்கையின் கரையோரப் பகுதியையும் உலுக்கிய சுனாமி அனர்த்தம் நடந்த காலப்பகுதியாகும். இதில் இலங்கையில் மட்டும் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும், காணாமல் போயும் இருந்தனர்.

கல்முனையில் கடற்கரையோரம் பிறந்து சில மாதங்களே ஆன ஒரு குழந்தையும் அடங்கியிருந்தது. தென்னை மர வட்டுக்குள் சுனாமி அலை தூக்கிச் சென்று வைத்து பின்னர் அடுத்த அலையில் குப்பை மடு ஒன்றின் அருகில் தூக்கி வீசப்பட்ட கைக் குழந்தையை அயலவர்கள் கண்டுபிடித்தி ருந்தனர்.

சுனாமி அனர்த்தத்தில் அல்லோல கல்லோலப்பட்டவர்கள் தமது பிள்ளைகளையும். உறவுகளையும் பிரிந்து வெவ்வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில்தான் இக் குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.

இக் கைக்குழந்தை அனுமதிக்கப்பட்ட (வாட்) விடுதி இலக்கம் 81 ஆகையால் இக்குழந்தை ‘சுனாமி பேபி 81’ என அன்று அழைக்கப்பட்டிருந்தது. இக்குழந்தைக்கு உரிமை கோர எவருமில்லை என அறிந்த பலர் அக்குழந்தையை தம்மோடு கொண்டு செல்வதற்கு இது தனது குழந்தைதான் எனக் கூறிக்கொண்டு பல பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

ஒரு குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெற்றோர் உரிமை கோரி வைத்தியசாலைக்கு படையெடுக்கத் தொடங்கியதையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் இவ்விட்யத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இறுதியில் நீதிமன்றம் மரபணு பரிசோதனை மூலம் குழந்தையின் உண்மைப் பெற்றோர் யார் எனக் கண்டறிந்து குழந்தையை உரிய பெற்றோர்களிடம் அன்று கையளித்திருந்தது

கல்முனை – பாண்டிருப்பைச் சேர்ந்த் ஜெயராஜ் யுனிதா தம்பதிகளின் புதல்வன் ஜெயராஜ் அபிலாஷ் என மரபணு பரிசோதனை மூலம் நிருபிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்தது.

அன்று ‘சுனாமி 81’ என அழைக்கப்பட்ட ஜெயராஜ் அபிலாஷ் (10 வயது) நேற்று நடைபெற்ற ஐந்து புலமைப் பரீட்சைக்கு தோற்றுயுள்ளான்.

மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சைக்கு தோற்றியதாகவும் தன்னோடு 20 பேர் பரீட்சை எழுதியதாகவும் தான் பரீட்சையில் சித்தியடைவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அபிலாஷ் குறிப்பிடுகின்றான்.

அன்று தமது மகன் தங்களை விட்டு கை நழுவிப்போய் விடுவானோ என்ற பயம் இருந்ததாகவும் இன்று மகனை நினைத்து பெருமிதப்படுவதாகவும் தாய் யுனிதா கூறினார்.

(TK)

Related Post