சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர்.
தமிழக விஜயத்தின் போது அ.தி.மு.க. உட்பட இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று டில்லி சென்ற கூட்டமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான மன்மோகன் சிங் ஆகியோரை அவர்கள் சந்தித்திருந்தனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகிய எம்.பிக்களே நேற்றிரவு நாடு திரும்பினர்.
சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய எம்.பிக்கள் நேற்றுப் புதுடில்லியிருந்து திடீரென சென்னைக்குச் சென்றுள்ளனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசும் தமிழக மக்களும் குரல்கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது. ஆனாலும், அனைவரும் இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து ஒருமித்துக் குரல் கொடுத்தால் அது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்திக்க ஆவலாக உள்ளனர்” என்று நேற்று முன்தினம் சனிக்கிழமை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.