Breaking
Sat. Jul 27th, 2024

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை உட்பட முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாத் பதியுதீன் வியாழனன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துரையாடியதனையடுத்து தம்புள்ளை பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி முயற்சிகள் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் வியாழனன்று நடைபெற்ற பின் அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.

தம்புள்ளையில் கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதிக்கு அமைச்சர் விரிவாக விளக்கியுள்ளார்.

தம்புள்ளைப் பள்ளிவாசலுக்கு ஏதும் நடக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி இதற்கு  முன் அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்திய அமைச்சர், எந்த நேரத்திலும் பள்ளிவாசல் உடைக்கப்படலாம் என்ற பீதியில் அப்பிரதேசவாசிகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

இதுவரை இந்த விடயம் எனக்குத் தெரியாது என ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் றிஷாத் தெரிவித்தார்.

இதேநேரம், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசுமாறு அமைச்சர் றிஷாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, எதிர்வரும் வெசாக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு தனது செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு பணித்துள்ளார்.

இதேநேரம், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பழைய அகதிகளை மீளக் குடியேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் பற்றியும் அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இது தொடர்பாக உள்ள பிரச்சினைகளை பற்றி ஆராய்வதற்கு உயர் மட்ட மகாநாடொன்றை விரைவில் கூட்டுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் றிஷாத் தம்புள்ளை பள்ளிவாசல் விடயமாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்த அடுத்த ஒரு சில நிமிடங்களில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த மாத்தளைப் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பள்ளிவாசல் அகற்றப்படாதென உறுதி தெரிவித்துள்ளார் (நவமணி 09-05-2014)

Related Post