Breaking
Sat. Jul 27th, 2024

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கை அரசாங்கமும் தனித்தனியா இந்தியாவுடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றமை தொடர்பில் தான் அதிருப்தியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு ஏற்படாத விடயங்களையும், இணக்கப்பாடு ஏற்பட்ட விடயங்களையும் குறித்துக் கொண்டு, இந்தியாவுடன் இலங்கை அரசாங்கமும் தமிழர் தரப்பும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்று தான் கருதுவதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியொருவரும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை முறையாக அமைய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் ஏனைய மாகாண சபைகளில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அதிகாரங்களையாவது வடக்கு மாகாண சபைக்கு அளிப்பதற்காக அரசாங்க தரப்பை இணங்கச் செய்யும் முயற்சிகளில் தாம் உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள இடதுசாரித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் பாதுகாப்பு படைகளுக்காக காணிகள் கையகப்படுத்தப்படுவதையும், மக்களின் சிவில் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் இராணுவம் நிலைகொண்டிருப்பதையும் தடுப்பதற்காக தாம் உள்ளிட்ட சில தலைவர்கள் அரசாங்கத்தை இணங்கச் செய்யும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post