தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துணை போக மாட்டார். முன்பிருந்த ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினை தீர்வு குறித்து பல அழுத்தங்களைக் கொடுத்து வந்துள்ளனர். புதிய பிரதமர் மீது எமக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது என பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கத்தேய நாடுகளின் பகடைக் காய்களாக மாறியுள்ளனர். தமிழ் மக்களுக்கு அதிதியாவசிய தேவைகளை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாம் அரசோச்சும் வகையில் வடக்கு கிழக்கு இணைந்த தனிநாட்டைக் கோருகின்றது.
இலங்கை சுயாதீனமான நாடாகும். எனவே வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு நாம் இடமளிக்க முடியாது. இருந்தும் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை உணர்ந்து யதார்த்தமாக செயற்படுபவர். எனவே அவர் மீது முழு நம்பிக்கை இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். (JM)