Breaking
Sat. Jul 27th, 2024

பாகிஸ்தான் பிரதமரின் வீட்டை முற்றுகையிட முற்பட்ட எட்டுப் பேர் பலியாகியுள்ளதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக கூறி அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 15 நாட்களாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் அருகே போராட்டம் நடத்திவந்த இரு தலைவர்களும் நேற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி, இரு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் தொண்டர்களுடன் ஷெரிப் வீட்டை நோக்கி அவர்கள் முன்னேறிச் சென்றனர்.

நள்ளிரவில் அவர்களை வழிமறித்த பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைந்து போகச் செய்ய முயற்சித்தனர்.

இதேபோல், பாராளுமன்ற வளாகத்தின் புல்வெளி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிலர் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஓடினர்.

போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகை மற்றும் இரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கிகளால் சுட்டும் பொலிசார் விரட்டியடித்தனர்.

இதில் 8 பேர் பலியானதாகவும், பொலிசாரின் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்ததாகவும், இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிச் சென்று நவாஸ் ஷெரிப் வீட்டை முற்றுகையிடப் போவதாக இம்ரான் கான் மீண்டும் அறிவித்துள்ளார்.

இந்த முற்றுகையில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் மற்றும் தாஹிருல் காத்ரி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்திய செய்தி பரவத் தொடங்கியதும், கராச்சி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை சேர்ந்த இரு கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்லாமாபாத் இல்லத்தை விட்டு நவாஸ் ஷெரிப் லாகூருக்கு சென்று விட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பெர்வெய்ஸ் ரஷீத் தெரிவித்துள்ளார்.

Related Post