Breaking
Sat. Jul 27th, 2024

திங்கட்கிழமை உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷெங்கோ அந்நாட்டுப் பாராளுமன்றத்தைக் கலைத்திருப்பதாகத் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

மேலும் ஆக்டோபர் 26 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் கூறுகையில் உக்ரைன் விவகாரத்தில் தேசிய இணக்கப் பாட்டைக் கொண்டு வரக் கூடிய எந்தவொரு முடிவிலும் ரஷ்யா பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் உக்ரைனுக்கு இவ்வாரம் 2 ஆவது மனிதாபிமான உதவித் தொடர் வாகன அணியை அனுப்பவும் ரஷ்யா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் உக்ரைனின் கியேவ் நிர்வாகத்தின் அனுமதியின்றி ரஷ்ய டிரக்குகள் அடங்கிய வாகனப் பேரணி கிழக்கு உக்ரனின் எல்லையைக் கடந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் 10 ரஷ்யத் துருப்புக்களை உரிய ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் உக்ரைன் அரசு கைது செய்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புப் பிரிவு சேவை தெரிவித்துள்ளது. இவர்கள் குறித்து ரஷ்ய உள்ளூர் ஊடகம் கருத்துத் தெரிவிக்கையில் தமது துருப்புக்கள் தற்செயலாகவே உக்ரைன் எல்லையைக் கடக்க முயற்சித்ததாகக் கூறியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சமீபத்தில் ஊடகப் பேட்டி ஒன்றின் போது இராணுவப் பிரயோகம் உக்ரைன் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒரு போதும் உதவப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் முதன் முறையாக உக்ரைன் அதிபர் பொரொஷெங்கோ மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகிய இருவரும் பெலாருஸ் தலைநகர் மின்ஸ்க் இல் சந்தித்து அரசியல், குடிவரவு மற்றும் வர்த்தக ரீதியான விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post