Breaking
Sat. Jul 27th, 2024

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். இதை மோடி ஏற்றுக்கொண்டார்.

வருகிற செப்டம்பர் மாதம் மோடி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் செல்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றிய பின்பு வாஷிங்டன் செல்கிறார். அங்கு வெள்ளை மாளிகையில் செப்டம்பர் 30–ந்தேதி அதிபர் ஒபாமாவை மோடி சந்தித்து பேச்சு நடத்துகிறார்.

மோடி– ஒபாமா சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாராகி வருகிறது. இதையொட்டி அமெரிக்க உள்நாட்டு மந்திரி ஜான்கெர்ரி, ராணுவ செயலாளர் சக் ஹேகல் ஆகியோர் டெல்லி வந்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

அதன்பிறகு அமெரிக்க உள்துறை துணை செயலாளர் வில்லியம் பர்னஸ் டெல்லி வந்து அதிபர் ஒபாமாவின் அழைப்பு கடிதத்தை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.

இதற்கிடையே மோடி வருகையை எதிர்பார்த்து அதிபர் ஒபாமா ஆவலுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் தெரிவித்தார்.

வழக்கமான பத்திரிகைகள் சந்திப்பில் பேசிய எர்னஸ்ட், இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தது உங்களுக்கு தெரியும். மோடியை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார். சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இரு நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார உடன்பாடுகள் ஏற்படும் என்றார்.

Related Post